170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர்

To the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,…; to the chemist it is a mixture of phosphate and carbonate of lime, with a little gelatine; and lastly to naturalists it is simply an unhealthy secretion of the organ which produces mother-of-pearl in certain bivalves.
20,000 Leagues Under the Sea புத்தகத்திலிருந்து
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர்
ஆசிரியர்: சகோதரி ச.டெக்லா
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
முதல் ஈடு: செப்டம்பர் 2009
பக்கங்கள்: 160
விலை: ரூபாய் 75
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
————————————————————————————————————————————————————————————————————————————
The Portugese on the Pearl Fishery Coast. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர். தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளில் ஒருவரான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் முகவுரையைப் பார்த்தவுடன் அதிகம் புரட்டாமல் புத்தகத்தை வாங்கிவிட்டேன். வடக்கே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள‌ வேம்பார் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள வங்கக்கடலின் மன்னார் வளைகுடாப் பகுதிதான் முத்துக்குளித்துறை என அழைக்கப்படுகிறது. சங்கு குளிப்பதிலும் முத்துக் குளிப்பதிலும் அப்பகுதி வரலாற்றில் அறியப்படுகிறது. பரதவர் கரையர் முக்குவர் என்ற மூன்று சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான் அப்பகுதியில் அத்தொழில்கள் செய்து வந்தனர். போர்த்துக்கீசியர்கள் அங்கு வருவதற்கு முன் தமிழ் அரசர்கள், மதுரை சுல்தான்கள், விசயநகரப் பேரரசு, நாயக்கர்கள், பாளையக்காரர்கள் போன்றவர்களின் ஆட்சியில் அப்பகுதி எப்படி இருந்தது என ஆரம்பிக்கிறது புத்தகம்.

திருவிவிலியத்தில் பரதவர்கள் பர்வீம்கள் என்றும், உவரி நகரம் ஓபீர் என்றும் குறிப்பிடப்படுவதாகவும் ஆசிரியர் சொல்கிறார். முத்துக்குளிப்பில் கிடைத்ததில் அரசனுக்கும் மந்திரவாதிகளுக்கும் பங்கு கொடுக்கப்பட்டதாக மார்கோ போலோ தன் குறிப்பில் எழுதி வைத்ததாகவும் சொல்கிறார். மாப்பிழா லெப்பை ராவுத்தர் மரைக்காயர் என்ற தொழில் சார்ந்த இஸ்லாமியப் பெயர்களின் பொருளை இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். போர்த்துக்கீசியரும் சங்கு என்றே அழைத்தனராம். முத்துக்குளித்துறை, காந்தி பிறந்த கத்தியவார் தவிர வேறெங்கும் இந்தியாவில் சங்குகள் கிடைப்பதில்லையாம்.

மேற்கே அரபிக்கடலில் வாசனைப் பொருட்களைத் தேடி கால்வைத்த போர்த்துக்கீசியர்கள், இங்கே கிழக்கே வங்கக்கடலில் முத்திற்காக கால் பதித்தனர். முத்து சங்கு தவிர, அடிமை அரிசி துணி யானை குதிரை வெடியுப்பு என‌ பிற பொருட்களின் வணிகத்திலும் போர்த்துக்கீசியர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். போர்த்துக்கீசியர்கள் வருவதற்கு முன் இஸ்லாமியர்கள் முத்துக்குளித்துறையில் வணிக ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். ஐரோப்பியாவில் பக்கத்து நாடான ஸ்பெயின் இஸ்லாமியர்களுடன் ஏற்பட்ட மோதலால் எங்கு போனாலும், போர்த்துக்கீசியர்கள் தமது இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டி இருக்கிறார்கள். அது முத்துக்குளித்துறையில் பிரதிபலிக்க இஸ்லாமியர்கள் தங்கள் வணிகச் செல்வாக்கை இழக்கிறார்கள். இதனால் கொஞ்சம் பயனடைந்த பரதவர்களுக்கிடையே ஒருவகையான மேட்டுக்குடியினர் உருவாகி, சாதாரண மீன்பிடிப்பவர்கள் குறைத்து மதிப்பிடப்பட்டனர்.

போர்த்துக்கீசியர்கள் வரவால் முத்துக்குளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, ஒரு சாதாரண கடுக்கன் சண்டையில் கடுப்பாகி பரதவர்கள் அனைவரும் 1536ல் ஒட்டுமொத்தமாக கத்தோலிக்கக் கிறித்தவர்களாக மாறினது தான். அதற்கு முன் பொருளாதாரத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த பரதவர்கள், மதத்தாலும் ஒடுக்கப்பட்டனர்; இன்றும் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் விசயநகர இந்து அரசர்கள் அடிக்கடி தாக்க‌, அதுவரை வணிக மையமாக தாமிரபரணி கழிமுகத்திற்குத் தெற்கில் இருந்த புன்னைக்காயலைத் துறந்து தூத்துக்குடியை முக்கிய நகரமாக்கி இருக்கிறார்கள். இங்கிருந்த அரசுகள் எல்லாம் முத்துக்குளித்துறையை விடாமல் துரத்த, போர்த்துக்கீசிய மன்னர் அங்கிருந்தபடியே அதைக் காக்க‌ போராடி வீழ்ந்த கதையை இப்புத்தகம் அருமையாகச் சொல்கிறது.

பெண்ணிற்குச் சொத்துரிமைக்காக மதம் பரப்ப வந்த ஏசுசபையினர் குரல் கொடுத்தார்கள். இன்றும் கத்தோலிக்க கிறித்தவர்களில் திருமணத்திற்கு முன் ஓலை வாசிக்கும் வழக்கம் முத்துக்குளித்துறையில் தான் போர்த்துகீசியர்கள் மூலம் தோன்றிய‌து. குருஸ் என்ற போர்த்துக்கீசிய வார்த்தை சிலுவையைக் குறிக்கும். இன்றும் கத்தோலிக்க கிறித்தவ கிராமங்களில் இருக்கும் குருசடிகளை முதன்முதலில் முத்துக்குளித்துறையில் தான் போர்த்துக்கீசியர்கள் அறிமுகப்படுத்தினர். 1556ல் சேசு சபையினர் கோவாவில் முதல் அச்சினை உருவாக்கினர். இப்படி இன்று தமிழ்நாட்டின் சாதாரணமாகி விட்ட பல விடயங்களுக்குப் பின் போர்த்துக்கீசியர்கள் இருந்திருக்கிறார்கள். அல்போன்ஸா மாம்பழம் கூட அவர்கள் அறிமுகப்படுத்தியது தான்.

இந்தியாவில் முதலில் காலனி ஏற்படுத்தியவர்கள் போர்த்துக்கீசியர்கள் தான்.  அவர்களின் வியாபார வளர்ச்சியைப் பார்த்த பிறகுதான் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இங்கு காலனி அமைக்க ஆரம்பித்தன. தமிழக வரலாற்றில் பெரும்பாலான ஆவணங்கள் தமிழ் போன்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் அவை எளிதில் கிடைக்கலாம். ஆனால் போர்த்துக்கீசிய ஆவணங்கள், நமக்குப் புரியாத அவர்கள் மொழியில் இருப்பதால், அவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் மிக அரிது. அவ்வகையில் இப்புத்தகம் ஓர் அரிய வகை; அரிய முயற்சி. நீங்களும் படித்துப் பாருங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)

Advertisements