171. மதுரைக்கலம்பகம்

வெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை இப்பதிவைப் படிக்க முனைந்து வீணடிக்க வேண்டாம் என்கிறேன். பா வகைகள் நான்கு. ஈற்றடி முச்சீர்களாகவும் மற்ற அடிகள் நான்கு சீர்களாகவும், இரண்டு முதல் பன்னிரண்டு அடிகளுக்குள் வருவது வெண்பா. மூன்றடிகளுக்குக் குறையாமல் அடிதோறும் நான்கு சீர்களுடன் வருவது ஆசிரியப்பா. கலிப்பாவும் அப்படித்தான். இரண்டும் தளைகளில் வேறுபடுகின்றன. மறந்து போயிருந்தால் அல்லது தமிழே படித்திருக்காவிட்டால், தளை என்பது யாப்பு இலக்கணத்தில் இன்னொரு குரூப்பு என்று பிக்கப் செய்து கொள்ளுங்கள். மூன்றடிகளுக்குக் குறையாமல் இருசீர் அடிகளும், முச்சீர் அடிகளும் கலந்து வருவது வஞ்சிப்பா. பா இனங்கள் மூன்று. தாழிசை. துறை. விருத்தம். இவையும் இன்னொரு குரூப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பா வகை மற்றும் இனம் என்ற‌ இந்தக் குரூப்புகளை எல்லாம் அப்படி இப்படி சேர்த்து பிரித்து கலக்கி, புதிய குரூப்புகளை உண்டாக்கலாம். எதுகை நயத்துடன் நான்கடிகளில் இரண்டாம் அடியின் ஈற்றுச் சீர் தனியாக வருவது நேரிசை வெண்பா. அப்பறம் நேரிசை ஆசிரியப்பா, கலித்தாழிசை, கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா, கலிவிருத்தம், அறு/எழு/எண்/14 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், விருத்தக் கலித்துறை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், கொச்சகக் கலிப்பா, சந்தவிருத்தம், கைக்கிளை எனப் பல வகைகள். இந்த நீஷபாஷை டமில் நமக்கெதுக்கு, சிரமப்படாமல் மதிப்பெண் வந்தால் போதும் என‌ தெய்வபாஷை சமஸ்கிருதம் மூலம் இந்தி படித்துக் கொண்டிருக்கும் சில குரூப்புகள் உள்ள இத்தலைமுறையில், தமிழ் யாப்பிலக்கணத்தின் பல குரூப்புகளை ஓரிடத்தில் கொண்ட புத்தகம் இதோ!

தமிழைக் குடித்த கடலோடு – நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை – இது
மரபுகள் மாறா வேல்மதுரை!

தென்னவன் நீதி பிழைத்ததனால் – அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!
– வைரமுத்து
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: மதுரைக்கலம்பகம்
ஆசிரியர்: குமரகுருபரர்
உரைவிளக்கம்: ஞா.மாணிக்கவாசகன்
வெளியீடு:  உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை
முதல் ஈடு: நவம்பர் 2011
பக்கங்கள்: 176
விலை: ரூபாய் 60
வாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016
————————————————————————————————————————————————————————————————————————————
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் கோவை தூது உலா போல இன்னொரு வகை கலம்பகம். கலப்பு + அகம் = கலம்பகம். திருக்குறள் முழுவதும் வெண்பாக்களால் மட்டுமே ஆனது போல் அல்லாமல், பல செய்திகள் பற்றிப் பலவகையான பாவினம் பாவகை அமையப் பாடப்படுவது கலம்பகம். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகம், மதுரையில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள சொக்கநாதப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட 102 பாடல்களின் தொகுப்பு.

புயல்வண்ணம் மொய்குழல் பொன்வண்ணம் தன்வண்ணம் போர்த்தடங்கண்
கயல்வண்ணம் என்வண்ணம் மின்வண்ணமே இடைகன்னல் செந்நெல்
வயல்வண்ணப் பண்ணை மதுரைப்பிரான் வெற்பில்வஞ்சி அன்னாள்
இயல்வண்ணம் இவ்வண்ணம் என்நெஞ்சம் மற்றுஅவ் இரும்பொழிலே
மெய்யெழுத்துக்கள் தவிர அடிக்குப் 17 எழுத்துக்களுடன், ஏகாரத்துடன் முடிவதால் கட்டளைக் கலித்துறை குரூப்பு இது.

கரிய கண்டம் கரந்த ஓர்
நிருபர் கூடலின் நெஞ் சிரே
உருவமும் பெண் உருக்கொலாம்
அருவம் என்பதென் ஆவியே
முச்சீர்களுடன் நான்கு அடிகளில் இருப்பதால், இது வஞ்சிவிருத்தம் குரூப்பு.

ஒரு யானையோடு வில்லெடுத்துக் கணை தொடுத்துப் போரிட்ட நீர், வலிமை உடையவர்தான் என்றால், இந்தத் தலைவியின் மார்பகங்களாகிய இரு யானைகளைப் போரிட்டு வெல்ல ஓர் அம்பெடுத்து விடச் சொல்கிறது இச்செய்யுள்:
ஓரானை முனைப்போருக்கொரு கணை தொட்டெய்திடுநீர் ஒருத்தி கொங்கை
ஈரானை முனைப்போர்க்கும் வல்லீரேல் ஒருகணைதொட் டெய்தி டீரோ.
குமரகுருபரர் என்ற சைவ சாது எழுதியது தான் இவ்வரிகள்! இச்செய்யுளின் மூலத்தை, பண்பாட்டைக் காக்கப் போகிறோம் என, ஏதோ தமிழ் அறிஞர்கள் திருத்தி அமைத்தது போல் எனக்குத் தோன்றுகிறது. சந்தேகத்தைக் கேட்கலாம் என்றால், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்‘ புத்தகத்தின் இரண்டாம் பகுதி எழுதிக் கொண்டிருந்த பெருமாள் முருகனையும் கொன்றுவிட்டார்கள். வளர்க தமிழ்!

கூடல் நான்மாடக்கூடல் கடம்பவனம் ஆலவாய் எனப் பல பெயர்களால் அறியப்படுகிறது மதுரை. அப்பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் மதுரை என்ற பெயருக்கும் கூட புத்தகத்தின் முன்னுரையில் பல கதைகள். பிறகு தென்னாடுடைய சிவனின் அருமை பெருமைகள் தான் எல்லாப் பாடல்களும். தான் விரும்பும் காதலியை அடைய, தன் விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த, பனை ஓலைகளால் ஆன குதிரை மீதேறி காதலி உருவத்தை வரைந்து கழுத்தில் கட்டிக் கொண்டு காதலி இருக்கும் தெருவிலேயே போகும் செயலான மடலேறுதல் பற்றி இப்புத்தகத்தில் தான் கேள்விப்பட்டேன். மூன்று மார்பகங்களுடன் வலம்வரும் ஒரு பெண்ணின் கதையும் வருகிறது. இலையை எண்ண வந்த இடத்தில் தலை எண்ணும் வேலை நமக்கெதற்கு? தமிழ்ப் பா வகைகள் பலவற்றை ஓரிடத்தில் கலம்பக நூல்களில் படித்துப் பாருங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)