172. Emperors of the Peacock Throne

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.

பல தெலுங்கு தமிழ்ப் படங்களின் சண்டை பாடல் காட்சிகளில் இடம்பெறும் கோல்கொண்டா கோட்டையுடன் ஆரம்பிக்கிறேன். ஒரு காலத்தில் மிகப் பலமான அரசாங்கம் அது. அப்போதைய உலகின் ஒரே வைரச் சுரங்க நாடு. அதன் மக்கள் பெருக்கத்தைச் சமாளிக்கவே அருகில் ஹைதராபாத் நகரம் உருவாக்கப்பட்டது. அன்று மிக வலிமையான பேரரசர்கள் கூட நெருங்க முடியாமல் மாதக்கணக்கில் சுற்றிச் சுற்றி வந்த கோட்டை. இன்று ஹைதராபாத் நகரின் மூலையில் சிதிலமடைந்து கிடக்கிறது. ஓர் இஸ்லாமிய இளவரசன், இன்னோர் இஸ்லாமிய அரசைத் தரைமட்டமாக்கிய வரலாற்றின் எச்சம் அது. எச்சில்படுத்த‌ பெரும்பாலும் காதலர்கள் ஒதுங்கும் அந்த எச்சங்களுக்குள் என்னை மூன்று இடங்கள் யோசிக்க வைத்தன. 1. இன்றும் இயங்கும் ஒரு மகாகாளி கோவில் 2. இயங்காத ஓர் இடிந்த‌ மசூதி 3. இயங்காத ஓர் இடியாத மசூதி. 1. ஓர் இஸ்லாமியக் கோட்டைக்குள் ஓர் இந்துக் கோவில் எப்படி? 2. ஓர் இஸ்லாமிய இளவரச‌ன் ஏன் ஒரு மசூதியை இடிக்க வேண்டும்? 3. ஒரு மசூதியையே இடித்த அவ‌ன், ஏன் ஓர் இந்துக் கோவிலை விட்டு வைத்தான்?

மதத்தை மட்டும் மாற்றிப் போட்டுப் பார்த்தால் இது போல் பல முரணான உதாரணங்கள் உலகம் முழுவதும் கிடைக்கும். இந்து மன்னர்களே இந்துக் கோவில்களை இடித்ததற்கும், புத்த விகாரங்கள் பல‌ மன்னர்களால் இடிக்கப்பட்டதற்கும் தமிழகத்திலேயே பல சான்றுகள் உண்டு. மதம் நாடு அரசியல் என்ற மூன்று விடயங்களின் அடிப்படை நாம் அறியாத‌ வரை, கோட்டைக்கும் கோவிலுக்கும் வேறுபாடு நாம் தெரியாத வரை, மதத்தால் அரசியல் பிழைப்பவர்கள் கோவில் வழியே கோட்டைக்குப் போகத்தான் பார்ப்பார்கள். தற்போதைய தலாய் லாமா சொன்னது போல, அறியாமையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என நம்புவன் நான். மதத்தாலான துன்பங்கள் விலக, உங்களின் அறியாமையைக் கொஞ்சம் நீக்கும் இன்னொரு புத்தகப் பதிவாக இது அமையட்டும்.

நம் எல்லாருக்கும் ஆழ்மனதில் பள்ளிக்கூடங்களிலேயே பதியவைக்கப்பட்ட முகமது கஜினி, கொள்ளையடித்த பின் திரும்பிப் போய்விட்டார். அவர்தான் சுல்தான் என்ற பட்டத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர். முகமது கோரிதான் டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றிய முதல் இஸ்லாமியர். 1206ல் பிருத்விராஜ் சவுகானைக் கோரி வீழ்த்தி 350 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் இன்னும் ஒரேவொரு இந்து மன்னர் மட்டும் தான் ஒரேவொரு மாதம் டெல்லியை ஆளப் போகிறார். அது நீங்கலாக 1857 வரை கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிதான். கோரி கொல்லப்பட்ட பின் அவரின் மம்லூக் அடிமை வம்சத்தின் 10 சுல்தான்கள், 85 ஆண்டுகள் ஆண்டார்கள். குதுப்மினார் கட்டினார்கள். பின் கில்ஜி வம்சத்தின் 4 சுல்தான்கள், 30 ஆண்டுகள் ஆண்டார்கள். சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் காதல் அடிமையாக இருந்த திருநங்கை மாலிக் கபூர், மதுரை வரை படையெடுத்து தென்னிந்தியாவைப் புரட்டிப் போட்டார். ஆந்திராவில் காக்கத்தியர்கள், கர்நாடகாவில் ஹொய்சாலர்கள், தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சிகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். திருவரங்கம் ரெங்கநாதரையே பல்லாண்டுகள் தலைமறைவாகச் செய்தார். அவர் பற்றிய‌, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஹசர் தினார்‘ சிறுகதையைப் படித்துப் பாருங்கள்.

அதன்பிறகு துக்ளக் வம்சத்தின் 8 சுல்தான்கள், 93 வருடங்கள் ஆண்டார்கள். பின் துருக்கியப் பேரரசர் தைமூரின் கட்டுப்பாட்டில் சயீத் வம்சத்தின் 4 சுல்தான்கள், 37 ஆண்டுகள் ஆண்டார்கள். பின் லோடி வம்சத்தின் 3 சுல்தான்கள், 75 ஆண்டுகள் ஆண்டார்கள். அதன்பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரை, இடையில் 15 ஆண்டுகள் நீங்கலாக‌ சுமார் 315 ஆண்டுகள் தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சத்தைச் சேர்ந்த‌ ஒரேவொரு குடும்பம்தான் இம்மண்ணை ஆண்டது. அவர்கள் தான் முகலாயர்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேயர்களுடன் அனுசரித்துப் போன‌ மதவாதிகளால் இன்று கொடூரமாகச் சித்தரிக்கப்படும் ஆட்சியாளர்கள்! அக்பர் தெரியாமல் வட இந்தியா புரியாது. மாலிக் கபூர், அவுரங்கசீப் புரியாமல் தென் இந்தியா தெரியாது. இஸ்லாமியர்களை அறியாமல் இந்தியாவே புரியாது.

1024px-Mughal1700

(18ம் நூற்றாண்டின் இறுதியில் முகலாயப் பேரரசு. https://en.wikipedia.org)

In this history I have held firmly to it that the truth should be reached in every matter, and that every act should be recorded precisely as it occured. I have set down of good and bad whatever is known.
– Babur
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: EMPERORS OF THE PEACOCK THRONE – The saga of the Great Mughals
ஆசிரியர்: Abraham Eraly
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 1997
பக்கங்கள்: 555
விலை: ரூபாய் 395
வாங்கிய இடம்: ஹைதராபாத்
————————————————————————————————————————————————————————————————————————————
பாபர் ஹுமாயுன் அக்பர் ஜஹாங்கிர் ஷாஜஹான் அவுரங்கசீப் என்று தகப்பனுக்குப் பின் மகன் ஆண்ட ஆறு தலைமுறைப் பேரரசர்களால் கட்டமைக்கப்பட்டது தான் முகலாயப் பேரரசு. அதன்பிறகு 1857ல் சிப்பாய்ப் புரட்சி என்று இந்தியர்களாலும், சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேயர்களாலும் குறிக்கப்படும் நிகழ்வின் விளைவாக‌ பிரிட்டிஷ் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த மண் கொண்டுவரப்படும் வரை முகலாய வம்சத்தவர்கள் 11 பேர் ஆண்டார்கள். ஆனால் தங்கள் முன்னோர்கள் சிகரத்தில் நிறுத்தி வைத்துப் போன புள்ளியில் இருந்து அவர்களால் வெறுமனே மிக வேகமாகப் பாதாளத்தில் சரிந்து விழ மட்டுமே முடிந்தது. கடைசி மன்னரைப் பிரிட்டிஷ்கார‌ர்கள் பர்மாவிற்கு நாடுகடத்தியதுடன் மொத்தமாக முடிந்து போனது முகலாயப் பேரரசு. 1526ல் முகலாயப் பேரரசைப் பாபர் நிறுவியது முதல் அதை உச்சத்திற்குக் கொண்டு போய் நிறுத்திய அவுரங்கசீப் இறந்த 1707 வரை சொல்வதே இப்புத்தகம். Emperors of the Peacock Throne. ஒரு நாடோடி இனம் நாடமைத்த கதையிது. அந்நியர்களாக‌ நுழைந்து இம்மண்ணின் மைந்தர்களாகி இன்று மீண்டும் அந்நியர்களாக ஆக்கப்படுப‌வர்களின் கதையிது. புத்தகத்திற்குள் நுழையும் முன், அடுத்த ஐந்து பத்திகளில் முகலாயப் பேரரசர்கள் அறிமுகம்.

காபூல் நகரை மிகவும் கடினப்பட்டு ஆண்டு கொண்டிருந்த பாபர், தன் முன்னோர்களின் நினைவாக கைபர் கணவாய் வழியே பஞ்சாப் வரை படையெடுத்தார். அவருக்குப் பஞ்சாப் தாண்டி இந்தியாவைத் தாக்கும் எண்ணமெல்லாம் அப்போது இல்லை. இங்கிருந்தவர்கள் எல்லாம் பாபரிடம் போய் டெல்லியையும் தாக்கி ஆப்கானிய‌ சுல்தான் இப்ராஹிம் லோடியை வீழ்த்த உதவி கேட்டனர். 100 ஆயிரம் வீரர்கள் கொண்ட சுல்தானின் பெரும் படையை, வெறும் 12 ஆயிரம் வீரர்களுடன் முதலாம் பானிபட் போரில் வென்று, 1526ல் முகலாயப் பேரரசை நிறுவினார் பாபர். அந்த மலையக மனிதனுக்குத் தன் தாய்மண் நினைவில் உறுத்திக் கொண்டிருக்க, பீகார் வரை இணைத்து தன் அரசை வலிமையாக்கி விட்டு, காபூல் நோக்கித் திரும்பினார். காலம் என்னவோ பாபருக்கு விதித்தது இம்மண்தான்! இந்தியாவை நோக்கி ஐந்து வருடங்களுக்கு முன் கிளம்பிய பாபர், தன் தாய்மண்ணைத் திரும்பவும் பாராமலேயே இங்கேயே இறந்து போனார். அவரின் கல்லறை அவரின் விருப்பப்படி காபூலில் உள்ளது.

பாபருக்குப் பின் அவரது மகன் ஹுமாயுன், இரண்டு வருடங்கள் போராடி குஜராத்தையும், இன்றைய மத்திய பிரதேசத்தின் அன்றைய சிற்றரசுகள் சிலவற்றையும் இணைத்து, உடனே இழந்தார். வங்காளத்தை இணைக்கப் போய், வெற்றி பெற்றது போல் இருந்த நேரத்தில், ஷெர் கான் என்ற ஆப்கானிய தளபதியின் கிளர்ச்சியால் இந்திய எல்லைவரை விரட்டியடிக்கப்பட்டார். முகலாயப் பேரரசை அகற்றி ஷெர் ஷா சூரி என்ற பெயரில் ஷெர் கான் ஆட்சி அமைத்தார். வரலாற்றுத் திரைப்படங்கள் எடுப்பவர்களால் ‘மல்லிப் புடத்தாவுடா’ என்று கொடூரமாகக் காட்டப்படும் ஷெர் கான் தான் ரூபாய் நாணயத்தையும், அன்றைய உலகின் மிக நீளமான Grand Trunk சாலையையும் உண்டாக்கியவர். 15 ஆண்டுகளுக்குப் பின் ஷெர் கானின் வம்சத்தவர்களின் ஆட்சியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நீக்கிவிட்டு, ஹுமாயுன் மீண்டும் முகலாயப் பேரரசை நிறுவினார். ஒரு வருடம் கூட முழுமையாக ஆள முடியாமல், தன் முன்னோர்களைப் போல அற்ப ஆயுளில் இறந்து போனார். அப்போது இருந்த குழப்ப நிலையைப் பயன்படுத்தி, முற்காலத்தில் ஆப்கானியப் படைத்தளபதியாக இருந்த ஹேமச்சந்திரா என்பவர், 350 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சியை நீக்கிவிட்டு, டெல்லியின் அரியணையைக் கைப்பற்றினார். டெல்லியை ஆண்ட கடைசி இந்து மன்னர் என்பதால் இன்றும் நினைவு கூறப்படும் அவரின் ஆட்சியை, ஒரு மாதம் கூட முழுமை செய்யவிடவில்லை ஹுமாயுனின் மகன் அக்பர்.

Sixteen_views_of_monuments_in_Delhi_Peacock_Throne_Red_Fort_Delhi_1850

(Peacock Throne. https://en.wikipedia.org)

இரண்டே இரண்டு பேரரசர்களைத் தான் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் The Great என்ற அடைமொழியுடன் விளித்தனர். அவர்களில் ஒருவர், ஹுமாயுனுக்குப் பின் அரியணை ஏறிய அவரது மகன் அக்பர். இந்திய வரலாற்றை எழுதிய ஜவஹர்லால் நேரு, ‘நவீன இந்தியாவின் சிற்பி’ என்று அக்பரைப் புகழ்ந்தார். கிழக்கிந்தியாவில் வங்காளம், மேற்கிந்தியாவில் இராஜஸ்தான் என கோதாவரி நதிக்குத் தெற்கே இருக்கும் இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் இவரின் ஆட்சியில் வெகு விரைவில் முகலாயப் பேரரசுடன் இணைந்தன. போர்களைத் தவிர்க்க அண்டை தேசத்து இந்து மன்னர்களின் குடும்பத்துப் பெண்களை மணக்கும் வழக்கத்தை அக்பர் ஆரம்பித்து வைத்தார். இந்து மன்னர்களும் வழிமொழிந்த இவ்வழக்கம், அவுரங்கசீப்பின் கொள்ளுப் பேரன் காலம் வரை நீடித்தது என்பது இக்காலத்துக் கவுரவக் கொலையாளர்களுக்கு என்றேனும் புரியுமா? தன் முன்னோர்கள் போல் அற்ப ஆயுளில் சாகாமல், 49 ஆண்டுகள் ஆண்டு, 63 வயதில் இறந்தார் அக்பர்.

அக்பருக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கிரின் காலம், இந்திய வரலாற்றில் போர்களும் பஞ்சங்களும் கிளர்ச்சிகளும் அதிகம் இல்லாத பொற்காலம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஜஹாங்கிர் ஒன்றும் செய்யாமலேயே, அக்பர் அமைத்து வைத்துப் போன வலிமையான ஆட்சிமுறையின் முழுப்பலனும் பிரதிபலித்தது என்பதே உண்மை. 22 ஆண்டுகால ஜஹாங்கிரின் ஆட்சியில், கஷ்மீரில் இருக்கும் சில தோட்டங்களால் தான் ஜஹாங்கிர் பெரும்பாலும் அறியப்படுகிறார். ஜஹாங்கிரின் இயற்பெயர் சலீம். ‘அடி அனார்கலி கொஞ்சம் கேளடி; உந்தன் சலீமு நான்; கொஞ்சம் பாரடி’ என்று உன்னதக் காதல் கதை ஒன்றின் நாயகனாக மட்டுமே இன்று பெரும்பாலும் அறியப்படுகிறார் ஜஹாங்கிர். அவரது மகன் ஷாஜஹானும் அப்படித்தான்! போர்க்களத்தில் இரத்தம் தவிர்க்க, சொந்த சகோதரர்களை இரத்தப்பலி கொடுத்து ஆட்சி பிடிக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார் ஷாஜஹான். சுமார் 30 ஆண்டுகள் ஆண்ட அவர் தன் முடிசூட்டு விழாவில் அறிமுகப்படுத்திய புதிய அரியணைதான், இப்புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் Peacock Throne. அந்த அரியணை மற்றும் தாஜ்மஹால் செல்வச் செழிப்பு பற்றி எழுதினால் இப்பதிவின் நீளம், ஷாஜஹானின் முடிசூட்டு விழாவிற்கு அமைக்கப்பட்ட பந்தலின் நீளத்தைவிட அதிகமாகிவிடும்!

அக்பருக்குப் பின் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தியது, ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப் தான். ஆட்சியைத் தக்கவைக்க‌ தந்தை மற்றும் சகோதரர்களை ஒரே நேரத்தில் சிறையில் அடைத்தவர். ஆடம்பரத்தில் திளைத்த ஷாஜஹான் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மிக எளிமையாகப் பக்கிரி போல வாழ்ந்த அவுரங்கசீப் தான் அன்றைய உலகில் மிகப் பணக்கார மனிதர்! காபூல் முதல் காவிரி வரை மிகப் பிரம்மாண்ட பேரரசை ஆண்டவர். தன் ஆட்சியின் முதல் 23 ஆண்டுகளை வட இந்தியாவிலும், கடைசி 26 ஆண்டுகளைத் தென் இந்தியாவிலும், போரிலும் போர் சார்ந்த செயல்களிலும் மட்டுமே கழித்தார் அவுரங்கசீப். தன் தாய் மண்ணிற்கு மீளாமல் இறந்த பாபர் போல், தன் தாய் மண்ணாக ஆகிப் போன டெல்லிக்கு மீளாமலே இறந்து போனார் அவுரங்கசீப்.

IMG_3277

(பின்னாளில் தன் மனைவிக்கு நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன்னரே, அக்பரின் தாயால் தன் கணவருக்கு டெல்லியில் கட்டப்பட்ட ஹுமாயுனின் பிரம்மாண்ட கல்லறை. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று. 19-8-2014 அன்று நான் எடுத்த புகைப்படத்தின் புகைப்படம்)

நாடற்றும், சிலசமயம் வீடற்றும் சதுரங்க இராஜா போல் அலைந்திருக்கிறார் பாபர்! அதிர்ஷ்டம் என பெயருக்கு அர்த்தம் கொண்ட ஹுமாயுனுக்கு அதிர்ஷ்டம் அறவே இல்லை! ‘அக்பர் போல அதிர்ஷ்டசாலி’ என்ற சொல்லாடல் இன்றும் படிப்பறிவற்ற அக்பருக்கு உண்டு! தன் தகப்பனின் மகனாக மட்டுமே இருந்துவிட்டுப் போன ஜஹாங்கிர்! எஸ்.வி.சேகரின் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ நாடகத்தில் வருவதுபோல, சந்தோஷம் என பெயருக்கு அர்த்தம் கொண்ட ஷாஜஹான், அப்படி சந்தோஷமாக இருந்திருக்கிறார் அந்தப்புரத்தில்! 85 வயதிலும் போர்க்கள வாழ்க்கை கண்ட அவுரங்கசீப்! இன்று இந்தியத் துணைக்கண்டம் என்று அறியப்படும் பகுதியின் எல்லைகளைக் கிட்டத்தட்ட வகுத்தவர்கள் முகலாயர்கள் என்று, இத்தளத்தின் 109வது புத்தகத்திலேயே எழுதினேன். மதவாதிகள் சொல்லித் திரியும் அகண்ட பாரதம் என்பதே அவுரங்கசீப் ஆண்ட எல்லைகள்! முகலாயர்களால் அரசியல் நிலைத்தன்மை உண்டானது; நிலையான நாணய முறையும், அளவை முறைகளும் உண்டாயின; கங்கை டெல்டா பகுதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போரற்ற அமைதி கண்டது; அதிக நகரங்கள் உண்டாகின; புதுப்புது பக்தி மார்க்கங்கள் பிறப்பெடுத்தன; அடித்தள மக்களிடம் இருந்து மதச் சிந்தனைவாதிகள் தோன்றினர்.

இந்த ஆறு பேரரசர்களின் வாழ்க்கைமுறை, போர்கள், ஆட்சி என எல்லா விடயங்களையும் அலசி ஆராய்கிறது இப்புத்தகம். ஜஹாங்கிரின் கடைசி மனைவியான நூர்ஜஹானும் ஷெர் ஷா சூரியும் சிவாஜியும் விளக்கப்படுகிறார்கள். ஷாஜஹானின் மகளும் அவுரங்கசீப்பால் நேசிக்கப்பட்ட ஒரே சகோதரியுமான ஜஹனாரா இன்னும் நினைவில் நிற்கிறாள். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த சில விடயங்கள் பற்றி இப்புத்தகத்தில் இருந்து சில தகவல்கள்:
1. அக்பரின் மறுமனையாட்டியாகவும் (சின்ன வீடு), அவரின் மகன் ஜஹாங்கிரின் காதலியாகவும் ஒரேவோர் இடத்தில் மட்டும் அனார்கலி சொல்லப்படுகிறாள்! தந்தைக்குக் சொந்தமானவளை மகன் அடைய நினைக்கும் மனநிலைக்கு Oedipus complex என்று பெயர். காவியக் காதல் எண் 1!
2. ஷாஜஹானுடனான 20 வருட தாம்பத்ய வாழ்க்கையில் 14வது குழந்தையைப் பிரசவிக்கும் போது இறந்து போனாள் மும்தாஜ். காவியக் காதல் எண் 2!
3. அக்பரையும் பீர்பாலையும் கொண்ட பல நாட்டுப்புறக் கலைகள் இன்றும் உண்டு. பீர்பால் எப்படி இறந்தார் என்று தெரியுமா?
4. தீன் இலாஹி என்ற புதிய மதத்தை அக்பர் உண்டாக்கியதாகப் படித்திருப்பீர்கள். அவர் நினைத்திருந்தால் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் மேல் திணித்து இருக்கலாம். நமது இன்றைய ஆட்சியாளர்கள் போல் அன்று அவர் அப்படி செய்யவில்லை. அதனால் தான் Akbar is really Great!
5. அக்பரின் குழப்பமான முற்போக்கான நடவடிக்கைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இப்புத்தகம் சொல்லும் சில நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால், இத்தளத்தில் நான் எழுதிய 150வது புத்தகத்தின் படி, உலகின் மிகப் பிரபலமான சிலருக்கு இருந்த அதேதான் அக்பருக்கும் என நான் நினைக்கிறேன்; Temporal Lobe Epilepsy!
6. அக்பரும் ஜஹாங்கிரும் கிட்டத்தட்ட‌ நாத்திகர்கள்! அவர்கள் தாடியற்ற‌ மீசை வைத்திருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இன்றும் அக்பரை வெறுக்கும் சில இஸ்லாமியர்கள் உண்டு. எல்லா மதக் குருக்களுடனும் எவ்வளவு காமெடிகள் செய்திருக்கிறார் அக்பர்!

IMG_0275

(அவுரங்கசீப்பின் மிக எளிய கல்லறை. 26-9-2009 அன்று நான் எடுத்த புகைப்படம்)

புறாவுக்காகப் போர் மாதிரி, வாந்திக்காக war வந்த கதையும் உண்டு. எதிரிகள் நெருங்குவதை இரவில் குரைத்துச் சொன்ன நாய்க்குத் தங்கச் சங்கிலி இட்டு, அரியணையில் அருகில் அமர்த்தி மரியாதை செய்த அரசரும் இம்மண்ணை ஆண்டிருக்கிறார். ஆற்று வெள்ளத்தில் தன்னைக் காப்பாற்றிய படகோட்டியை ஒருநாள் அரசராகிப் பார்த்த அரசரும் இங்கு இருந்திருக்கிறார். தங்கமுலாம் பூசப்பட்ட அம்புகளை மனம்போன போக்கில் நகர் மீது ஏவி, அவை எந்தெந்த வீடுகளின் மேல் விழுகிறதோ அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்த ஓர் அரசர் டெல்லியை ஆண்டிருக்கிறார்! சில அரசர்கள் பற்றி உங்களுக்குத் தெரிகிறதா என பார்க்கலாம்.
1. மலையக முகலாயர்களில் முதன் முதலில் கடல் கண்ட பேரரசர் யார்?
2. கிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் ஆட்சியில், டெல்லியை ஆண்ட ஒரேவோர் இஸ்லாமிய ஆட்சியாளர்தான் போரில் மாண்டார். யாரது?
3. டெல்லியை ஆண்ட ஒரேவொரு பெண் யாரென்று தெரியுமா?
4. எதிர்காலப் பேரரசரைச் சுமக்கும் நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவி நடக்கச் சிரமப்படுவதால், ஒரு குதிரையைக் கேட்க, அதைக் கொடுக்க மறுத்து சாதாரண காவலாளியிடம் கூட அவமானப்படும் அளவிற்குக் கெட்ட காலத்தில் இருந்த‌ பேரரசர் யார்?
5. தன் வாரிசுகள் யாருமே தன் பாடையைச் சுமக்க வராமல் புதைக்கப்பட்ட பேரரசர் யார்?
6. அரியணை ஏறியவுடன் ஆட்சியாளர்கள் காலில் விழுந்து வணங்குவதை முதல் உத்தரவாகத் தடை செய்த பேரரசர் யார்?
7. மது குடித்தால் கை கால் வெட்டிய பேரரசர் யார்?
8. இசையைத் தடை செய்த பேரரசர் யார்?
9. போலோ விளையாடிய போது, பட்டாசு வெடித்துக் கொண்டாடிய போது இறந்த அரசர்களும் இஸ்லாமிய ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். படிக்கட்டில் தடுக்கி விழுந்து இறந்து போன பேரரசர் யார்?

முகலாயப் பேரரசர்களில் இன்று அதிகம் எதிர்க்கப்படுபவர்கள் பாபரும் அவுரங்கசீப்பும் தான். எறும்புக்கும் தீங்கு செய்யாமல் நம் இலக்கியங்களில் பரவலாக இருந்த‌ அப்பாவி சமணர்களை, மதத்தின் பேரில் கூட்டங் கூட்டமாக கழுவேற்றிக் கொன்ற கதைகளைப் பெருமையாகச் சொல்லும் கோவில்கள் இன்றும் உள்ளன. அதற்கெல்லாம் பின்வந்த முகலாயர்கள், அதிலும் குறிப்பாக முகலாயர்களிலேயே மிகவும் பலவீனமானவரான அவுரங்கசீப் அவ்வளவு கொடியவர் அல்லர். எதிரிகளே ஆனாலும் முகலாயர்களின் பெயர்களைச் சாலைகளுக்குச் சூட்டி மரியாதை செய்தார்கள் ஆங்கிலேயர்கள்! மசூதியின் மேற்கூரையில் பீரங்கிகளைக் குவித்து போர் செய்த அவுரங்கசீப்பின் பெயரைச் சாலைகளில் கூட இருக்கவிடாமல் அவசர அவசரமாக நீக்குகிறது நமது சுதந்திர அரசு! கொலைக் குற்றத்திற்குத் தண்டனை பெற்றவர்கள் பெயரிலும், பிரிவினைக் காலத்தில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தானுடன் சேரப்போன திவான் பெயரிலும் கூட சென்னையில் சாலைகள் இருக்கின்றன. ஏன் குறிப்பாக அவுரங்கசீப் மதவாதிகளால் குறிவைக்கப் படுகிறார் என்பதை நீங்களும் படித்து உணருங்கள்.

IMG_0279

(தன் தாய்க்காக அவுரங்கசீப்பின் மகன் ஆஷம் ஷா கட்டிய‌ Bibi Ka Maqbara. 26-9-2009 அன்று நான் எடுத்த புகைப்படம்)

பாபரும் இஸ்லாமும் புரியாத காலத்திலேயே, இத்தேசத்தில் தீவிரவாதத்தை விதைத்து மதக்கலவரங்கள் வளரக் காரணமான‌ பாபர் மசூதி இடிப்பைச் சிலேடையாக சிறுகதை எழுதியவன் நான்! பாபர் மசூதிக்குள் இராமர் சிலை நுழைந்த கதை மிக மிகச் சமீபத்தில் தான் என்பதைச் சமூக அக்கறையுள்ள பலர் அறிந்திருப்பீர்கள். பாபர் இறந்த பின் வெகு சமீபத்தில் வாழ்ந்த துளசிதாஸ், கோபன்னா போன்ற அதிதீவிர இராமபக்தர்கள் கூட, அயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியதாக சொல்லவில்லை என்பதைப் பல சமூகவியலாளர்கள் சொல்கின்றனர். இப்புத்தகம் படித்த பின் அதே போல் எனக்குத் தோன்றிய கேள்விகள், உங்கள் சிந்தனைக்கும்:
1. அக்பரைத் தவிர எல்லா முகலாய மன்னர்களும் கோவில்களை இடித்திருக்கின்றனர்! ஆனால் ஜஹாங்கிர் காலம் வரை எதுவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை இல்லை. ஜைனக் கோவில்களின் வெறும் ஆபாசச் சிற்பங்களை இடித்ததைப் பாபரே தன் சுயசரிதையில் சொல்கிறார். அயோத்தியில் முழுக் கோவிலையும் அப்படி இடித்திருந்தால் பெருமையாக சுயசரிதையில் சொல்லியிருக்க மாட்டாரா?
2. ஷாஜஹானும் அவுரங்கசீப்பும் தங்கள் படையெடுப்பில் பல இந்துக் கோவில்களை இடித்து மசூதிகளாக்கினார்கள். ஓர்ச்சா நகரில் ஷாஜஹான் ஒரு கோவிலை இடிக்கும் போது, அவர் படையிலும் சொந்தக்காரர்களாகவும் பக்கத்தில் இருந்த இந்து இராஜபுத்திர அரசர்கள் ஒன்றுமே சொல்லவில்லை என வரலாறு சொல்கிறது. வாரணாசி ஜில்லாவில் மட்டும் 76 புதிய கோவில்களை ஷாஜஹான் இடித்ததாக அன்றைய வரலாற்றாளர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அயோத்தி கோவில் பற்றி 19ம் நூற்றாண்டு வரை தகவல் இல்லை.
3. கஜினிக்கு முக்கிய படைத்தளபதியாக இருந்தவர் திலக் என்ற இந்து. முகலாயப் பேரரசர்களின் பெரும்பாலான படைத்தளபதிகள் இந்துக்களே. டெல்லியை ஆண்ட கடைசி மன்னராகக் கொண்டாடப்படும் ஹேமச்சந்திரா, லோடி வம்சத்தவர்களுக்குப் படைத்தளபதியாக இருந்தவர். சிவாஜியே முகலாயர்களின் படையில் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் இஸ்லாமிய ஆட்சியில் பெரிய மதக்கிளர்ச்சிகள் ஏதும் இல்லை. சீரிய‌ இந்துமத அடையாளங்களுடன் முகலாயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த மராட்டியர்கள் கூட, அதிகாரத்தைக் கைப்பற்ற போரிட்டார்களே தவிர, மதத்தைக் காக்க அல்ல. அப்படி என்றால், அவர்களால் இவர்கள் மதத்திற்குத் தீங்கில்லை என்றுதானே அர்த்தம்? இல்லை இன்றுபோல் அல்லாமல், மதம் வேறு அரசு வேறு என்று அக்காலத்தில் வாழ்ந்தார்களா?
4. இந்து மதக் கோட்பாடுகளை மீட்டெடுத்து இராம இராச்சியத்தை அமைக்கப் புறப்பட்ட மராட்டிய மாவீரன் சிவாஜி, முகலாயப் படையுடன் சேர்ந்து பிஜப்பூர் சுல்தானைத் தாக்கினார். இராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை முகலாயர்கள் இடித்திருந்தால், அவர்களுடன் சத்ரபதி சிவாஜி கைகோர்த்திருப்பாரா?
5. தென்னிந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆட்சியில் இந்துமதத்தை மீட்டெடுக்க உருவான விஜயநகரப் பேரரசின் நாயக்கர்கள், தஞ்சை மதுரை செஞ்சி என தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டார்கள். தீபாவளியையும் இட்லியையும் இங்கு சொன்னவர்கள், கோவில் இடித்த கதை சொன்னதாக யாரேனும் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
6. ‘நல்லவேளை
இராமர் அங்கு பிறக்கவில்லை
தலைதப்பியது தாஜ்மஹால்
என்றொரு புதுக்கவிதை உண்டு. ஒரு சிவன் கோவிலை இடித்து தாஜ்மஹாலைக் கட்டியதாக ஒரு வழக்கும் இன்றும் உண்டு. ஓர் இந்து மன்னனிடம் இருந்து ஷாஜஹான் அந்நிலத்தை வாங்கியது உண்மை. அம்மன்னனும்  வாரிசுகளும் பல போர்களில் இஸ்லாமியப் படைத்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் கோவிலை அவர்கள் அனுமதி இல்லாமல் ஷாஜஹான் இடித்திருப்பார் என நீங்கள் நம்பினால் நம்புங்கள்!

220px-The_Burning_of_the_Rajput_women,_during_the_siege_of_Chitor

(சித்தோர்கார் கோட்டையை அக்பர் கைப்பற்றிய போது தீக்குளிக்கும் இராஜபுத்திர மகளிர். https://en.wikipedia.org)

வறட்சி வெள்ளம் விபத்துகளைப் பணம் கொடுத்து ஈடு செய்பவர்களால் ஆளப்படுபவர்கள் நாம். கஷ்மீர் வறட்சியில் அக்பர் என்ன செய்தார் எனப் படித்துப் பாருங்கள். 40 போர்களுக்கு மேல் வெற்றி மட்டுமே கண்ட‌ பாஜிராவ் என்ற மராட்டிய தளபதி ஒருவரின் கதையைக் கொண்டு ஓர் இந்தித் திரைப்படம் சமீபத்தில் கூட வந்தது. உண்மையில் முகலாயர்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலத்தில், ஆட்சியைக் கைப்பற்றி அவர்களின் கனவான இராம இராச்சியத்தை அமைக்க வலிமை இருந்தும் மராட்டியர்கள் அப்படி செய்யவில்லை. ஏன்? நமக்குள் ஒற்றுமையில்லை என்று காலங்காலமாக சொல்லித் தரப்பட்ட காரணங்களை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதுபோன்ற புத்தகங்கள் மூலம் நீங்களே வரலாற்றைக் கோர்வையாக‌ படித்தறிவீர்!

தன் சகோதரன் தாரா சிக்கோவை டெல்லியின் தெருக்கள் வழியே இழுத்து வந்து, அவரின் மகனின் பார்வையில் படும்படி தலையை வெட்டி, தன் தந்தையின் சாப்பாட்டு மேசைக்குத் தட்டில் அனுப்பினார் அவுரங்கசீப்! ‘தாரா சிக்கோ போன்ற‌ தகுதி உடையவர்களால் அல்லாமல் அவுரங்கசீப் போன்றவர்கள் ஆள்வதற்கென்றே சபிக்கப்பட்ட நாடு இது‘ என்று ஓர் ஐரோப்பியர் அக்கொடுமையைப் பார்த்து எழுதி வைத்தார். அதைவிடக் கொடூரமாக‌ ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் பிறப்புறுப்பில் கைவிட்டு கருவழித்த குஜராத் படுகொலைகளுக்கு மக்களாட்சி கொடுத்த நீதியைக் காணும்போது, அச்சாபம் இன்றும் தொடர்கிறது என்றே சொல்வேன்! முகலாயர்களுக்கு முன்னே இங்கிருந்த கொடுமைகளான உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், தீண்டாமை போன்றவற்றிற்கும் மாட்டுக்கறிக்கும் முகலாயர்களைக் குற்றம் சொல்லும் அளவிற்கு வரலாற்றை மிக வேகமாக மாற்றி எழுதுகிறார்கள். யோகாவைத் திணிக்கும் மதவாதிகள், அரண்மனைக்குள் சூரிய நமஸ்காரம் முகலாயர்கள் செய்ததைச் சொல்வதில்லை. கோவில் இடித்ததைச் சாடும் இவர்கள், அவர்கள் புதிய மசூதிகளைத் தடை செய்ததைச் சொல்வதில்லை. மதமாற்றியதைச் சொல்லும் இவர்கள், அவர்கள் கோவில்களுக்குக் கொடை கொடுத்ததைச் சொல்வதில்லை. மனிதர்களைக் கொன்றாவது மாடுகளைக் காக்கப் புறப்பட்ட‌ இவர்கள்,  ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் அசைவம் அனுமதிக்காததைச் சொல்வதில்லை. சமஸ்கிருதம் திணிக்கும் இவர்கள், மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் அவர்கள் மொழிப்பெயர்த்துப் படித்ததை என்றுமே சொல்லப்போவது இல்லை.

இராமரின் கிருஷ்ணரின் அவதாரம் என்று இந்துக்களாலும், பன்னிரண்டாம் இமாம் ஆன மகதி என இஸ்லாமியர்களாலும், ஒரே நேரத்தில் இரு மதத்தவர்களாலும் மீட்பராகக் கருதப்பட்ட இஸ்லாமியப் பேர‌ரசரால் இதே இந்தியா ஒரு காலத்தில் ஆளப்பட்ட நல்ல கதையை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அனைவருக்கும் இரம்ஜான் வாழ்த்துக்கள்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)