173. வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!

கடந்த கொஞ்ச நாட்களாகவே புத்தகம் பக்கத்தில்ரொம்ப சீரியசான புத்தகங்களாகவே பதிவிடப்பட்டு வருகின்றன.  இந்த போக்கை வன்மையாகக் கண்டிக்கும் விதமாக ஒரு ஜாலி புத்தகம். 🙂

பணம் பண்ணுவதற்காக நான் படமெடுப்பதில்லை. மேலும் படங்களை எடுப்பதற்காகத்தான் நான் பணம் சம்பாதிக்கிறேன்.

– வால்ட் டிஸ்னி

எனக்கு அவரைப் பற்றி பெரிதாக எதுவுமே தெரிந்திருக்காத போதும், என் மனதுக்கு நெருக்கமான ஆளுமைகளில் ஒருவர் வால்ட் டிஸ்னி. அவர் என்னுடன் பேசாமலிருந்திருக்கலாம். அவரின் சாயலில், அவர் பாத்திரங்களுடன் பலமுறை பழகியிருக்கிறேன். உலகம் முழுவதும் இத்தனை குழந்தைகளுக்கு பிடித்தமான பாத்திரங்களை உருவாக்கியவரும் குழந்தைகளுககு பிடித்தமானவராகவே இருப்பார் என்று நினைத்திருந்தேன். என் நம்பிக்கை வீண் இல்லை என்று உறுதி சொல்கிறார் கிழக்கின் ஆஸ்த்தான biographer சொக்கன் இப்புத்தகத்தில்.

—————————————————————

புத்தகம் : வாத்து, எலி, வால்ட் டிஸ்னி

ஆசிரியர்: என். சொக்கன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பக்கங்கள்: 206

விலை: ரூபாய் 80

—————————————————————

இப்போது இருக்கும் பெரும்பாலான சுட்டிகளிடம் உங்களுக்கு யாரைப்பிடிக்கும் என்று கேட்டால், அப்பாவோ அம்மமாவோ வருவதில்லை. டோராவுமம், மிக்கி மவுசும்  ஸ்பைடர்மேனும் இன்ன பிறரும்தான் வருகின்றனர். இன்று அவர்களுக்கு 24 மணிநேர கார்ட்டூன் சேனல்களும், தேவைப்பட்டால், பெற்றோரின் பர்சுக்கு உலைவைக்கும் மெர்ச்சண்டைஸ்களும் ஏராளமாய்க் கொட்டிக்கிடக்கின்றன.

ஆனால், இந்தியாவில் தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிய காலம் ஞாபகம் இருக்கிறதா. அதில் வாரத்துக்கு ஒரு முறை ஞாயிறு காலை மட்டும் போனால் போகுதென்று அரை மணிநேரம் மட்டும் ஒளிபரப்பாகும் Uncle Scrooge ஐ காண ஒரு வாரம் முழுவதும் காத்துக்கிடந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படித்தான் வால்ட் டிஸ்னி எனக்கும் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை வால்ட் டிஸ்னி எனும் பெயரைக்கேட்கும் போதே, இளமைக்கால நினைவுகளும் மெல்லியதொரு குறுகுறுப்பும் மனசுக்குள் படபடக்கின்றன. அந்த அசைபோடலின் நீட்சியாகவே அனிச்சையாக கையிலேறிக்கொண்டது இப்புத்தகம்.

 

அடுத்தவரிடம் பேசுவதற்கே தயங்கும், சங்கோஜமான, நல்ல மாதிரி படம் வரைந்தாலும் அதைவைத்து சரியாக பணம் பண்ணத் தெரியாமல், பிழைக்கத்தெரியாத மனிதனென பெயரெடுத்த வால்ட் டிஸ்னி, உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாறு, டிஸ்னி அனிமேசன் படங்களின் திரைக்கதைக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. சிறுவயது முதலே அசாத்தியமான கனவு காண்பவராக இருந்திருக்கிறார். அனிமேசன் துறையைத்தாண்டி கேளிக்கை பூங்காங்களில் கால் பதித்த போது யாருமே அவரை நம்பவில்லை. இந்த ஆள் காசை கரியாக்கத்துடிக்கிறான் என்று புறந்தள்ளினர். ஆனால் இன்று Disney World, உலகின் மிக அதிக பார்வையாளர்களைக்கொண்ட(ஆண்டுக்கு 5.2 கோடி பார்வையாளர்கள்) மாபெரும் சாம்ராஜியமாக திகழ்கிறது. ஒரு சோறு பதம்.

இன்று வரை இளசுகளிடம் மவுசு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் மிக்கி மவுசுக்கு இந்த வருடத்தோடு 88 முடிந்து 89 தொடங்குகிறது. இன்னும் பல தலைமுறைகளுக்கும் டிஸ்னி குழந்தைகளை மகிழ்வித்திருப்பார் என்று தாராளமாக நம்பலாம்.

புத்தகத்தைப் பற்றி ஒரே ஒரு வருத்தம். கோட்டோவியங்களைக்கொண்டு உலகுக்கே கதை சொன்ன வால்ட் டிஸ்னியைப் பற்றிய புத்தகத்தில் ஒரு ஓவியம் கூட இல்லை. காப்பி ரைட் சிக்கல்களுக்காக தவிர்த்திருப்பார்களென நினைக்கிறேன். எப்படியாயினும், இது ஒரு சுவாரஸ்யமான சுய முன்னேற்றப் புத்தகம். oxymoron மாதிரி படுகிறதா? அதுதான் இல்லை. படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

– Bee’morgan

(http://beemorgan.blogspot.in/)

Advertisements