175. புலிப்பறழ்

‘இருந்து என்ன ஆகப் போகிறது; செத்துத் தொலைக்கலாம்’ என்று 26 மாதங்கள் எழுதாமல் இருந்தேன். ‘செத்து என்ன ஆகப் போகிறது இருந்து தொலைக்கலாம்’ என்று மீண்டும் எழுந்து எழுத வந்திருக்கிறேன். இத்தளத்தில் 136வது புத்தகத்தில், எழுதுதலின் அருமை பற்றி கைப்பட எழுதி வைத்துவிட்டு, இத்தனை நாட்கள் எழுதாமல் இருந்ததில், இத்தளத்தில் 150வது புத்தகத்தில் சொன்னது போல், வலது இடது மூளைகளுக்கு இடையே ஏதோ தொடர்பு துண்டிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். அது நல்ல பதார்த்தத்தைச் சாப்பிடுவது போல‌. அதை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பது, பதார்த்தத்தைப் பகிராமல் நான் மட்டும் சாப்பிடுவது போல‌. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பாதது, பீயைத் தின்பதற்குச் சமம் என்கிறார் கவிஞர் நந்தலாலா. இதோ பகிர்தலை மீண்டும் தொடர்கிறேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: புலிப்பறழ்
ஆசிரியர்: மகுடேசுவரன்
வெளியீடு: தமிழினி
முதல் ஈடு: மே 2016
பக்கங்கள்: 96
விலை: ரூபாய் 70
————————————————————————————————————————————————————————————————————————————
கவிஞர் மகுடேசுவரனுக்கு அறிமுகம் தேவையில்லை. பயணம் சினிமா என்று இணையத்தில் கட்டுரைகள் எழுதினாலும், அவரின் கவிதைகளின் மொழிநடையைப் பெரிதும் விரும்புபவர்களில் நானும் ஒருவன். நாம் சாதாரணமாகக் காணும் காட்சிகளைக் கவிதைப்படுத்தி இருப்பதைச் சில சோற்றுப் பதங்களாக, இக்கவிதைத் தொகுப்பில் இருந்து மேற்கோள் காட்டுவதே போதும் என நினைக்கிறேன்.

வாய்திறந்து வெய்யில்காயும்
பாறை முதலையின் பல்லிடுக்கில்
ஓர் இறைச்சித் துணுக்கு.
பறவையாய்ப் பிறந்த நீ
அதைக் கொத்திக்கொண்டு
தப்பிப் பறக்க வேண்டும்.
இன்றுள்ள வாய்ப்புகள் யாவும்
இவ்வகையே!

காடு
காலடிக்கூளமாகி
பஞ்சுபோல் பாதந்தாங்குவதை
உணர்ந்ததுண்டா?

வனத்தடத்தில்
யானைச் சாணக்குவியல்
எங்கேனும் கண்டால்
ஓடிப்போய் மிதியுங்கள்.

கொக்கின் கூரலகு
கொத்தித் தூக்கும்போதுதான்
வாழ்ந்த பெருங்குளத்தை
முழுதாய்ப் பார்க்க‌
வாய்க்கிறது மீனுக்கு.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)