177. காவிரி (நேற்று–இன்று–நாளை)

ஒக்கேனக்கலில் வெள்ளம். மேட்டுர் அணை நிரம்பிவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம். காவிரி பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. அம்மாவின் நல்லாசிக்கிணங்க நடக்கும் நல்லாட்சிக்கு இயற்கையே உதவுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார் ஓர் அமைச்சர். எல்லாம் சரிதான். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் காவிரி சென்றடையவில்லை என்ற செய்தியும் வருகிறது. காவிரியையும் புரிந்து கொள்ள முடியவில்லை; மனிதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: காவிரி (நேற்று–இன்று–நாளை)
ஆசிரியர்: பெ.மணியரசன்
வெளியீடு: பன்மைவெளி
முதல் ஈடு: சனவரி 2017
பக்கங்கள்: 208
விலை: ரூபாய் 120
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2017
————————————————————————————————————————————————————————————————————————————
Riparian Right, Prescriptive right, Tribunal போன்ற பதங்களைத் தமிழிலில் சொல்லும் ஒரு புத்தகத்தைக் கண்டதில் மகிழ்ச்சி. காலங்காலமாக காவிரியை இன்றைய கர்நாடகாவை விட, இன்றைய தமிழகம் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறது என்பதைச் சிலப்பதிகாரம், புறநானூறு என பல உதாரணங்களுடன் சொல்கிறது. காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் எதுவும் கர்நாடக அரசுகள் தீட்டவில்லை என்றும் சொல்கிறது. பாகிஸ்தானுடனும் வங்கதேசத்துடனும் இந்தியா செய்து கொண்ட ஆற்றுநீர்ப் பகிர்வு ஒப்பந்தங்கள், 2000 ஆண்டுகளாகத் தமிழில் பயன்படுத்தப்படும் ‘மதகு’ என்ற வார்த்தை மூலம் இந்நிலத்தின் மிகத் தொன்மையான பாசன அறிவு என்று பல முக்கிய தகவல்களையும் சொல்கிறது.

பல ஆண்டுகளின் விவரங்கள். பல டிஎம்சி கணக்குகள். பல்வேறு அரசுகள் பல்வேறு காலங்களில் காவிரியை என்னென்ன செய்தன என தேதிவாரியாக செய்திகள். உதாரணமாக, சமீபத்தில் காவிரி நீர்ப்பகிர்வு பற்றி இறுதித்தீர்ப்பு வந்தவுடன், தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் பதவிவிலகக் கோரிக்கைகள் எழுந்ததைப் படித்திருப்பீர்கள். தமிழக வரலாற்றிலேயே காவிரிக்காக பதவிவிலகிய ஒரே தலைவர் வாழ‌ப்பாடி இராமமூர்த்தி, என்ற செய்தியையும் அப்போது கேட்டிருப்பீர்கள். அதை இப்புத்தகத்தில் தான், அக்கால சூழ்நிலையுடன் விரிவாகப் படித்தேன். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து முதல்வராக உயர்ந்து கொண்ட‌ கருணாநிதி, காவிரிப் பிரச்சனையை மட்டும் 1968 முதல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே வைத்திருந்த கதையும் படித்தேன். தமிழக அரசு சார்பிலும், தஞ்சை விவசாயிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளை அவரே திரும்பப் பெற்ற வரலாற்றையும் படித்தேன். இதுபோல் காவிரித்தாய் ஜெயலலிதாவின் பட்டியல் மிகப் பெரியது.

காவிரி சிக்கலைப் பற்றி தமிழில் எல்லாமும் சொல்கிறது, என்று அனைவருக்கும் எளிதில் சென்றிருக்க வேண்டிய புத்தகம். ஆனால் நிறைய குறைகள். ஆற்று நீரில் கலக்கும் சாயக்கழிவுகள் போல், கண்ணை உறுத்தும் எழுத்துப் பிழைகள் கொட்டிக் கிடக்கின்றன. கன்னடர்களையும், அரசுகளையும் திட்டித் தீர்ப்பதிலேயே புத்தகம் பெருங்கவனம் கொண்டிருப்பதாக ஒரு தோற்றம். அதீத உணர்ச்சிக் கொட்டல். தமிழக மணற்கொள்ளையர்களுக்குக் காவிரியில் தண்ணீர் இருக்கக் கூடாது என்ற அப்பட்டமான குற்றத்தை இப்புத்தகம் பதிவு செய்ததாக நினைவில்லை. ஒரே விடயத்தைப் பல இடங்களில் பேசுகிறது. தொடர்ச்சி என்பது ஆற்றைப் போல், புத்தகத்திற்கும் தேவை. திடீரென ஒரு சந்தேகம் வந்தால், எளிதில் தேடிப் பார்த்து கண்டுபிடிக்கும் அளவிற்குக் கோர்வையாக இல்லை. இவ்வருட சென்னை புத்தக கண்காட்சியில், இப்புத்தகத்துடன் தொடர்புடைய ஒருவரைச் சந்தித்து சொன்னேன். அவசர அவசரமாக புத்தகத்தை வெளியிட வேண்டிய நிலை இருந்ததால் ஏற்பட்ட பிழை என்றார்.

இத்தனை குறைகள் இருப்பினும், காவிரி சிக்கலைப் பற்றி எல்லாமும் சொல்லும் புத்தகம் என்பதால், தாராளமாகப் படிக்கலாம். அன்னப்பறவை போல் தேவையானவற்றை மட்டும் கிரகித்துக் கொள்ளவும்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)