179. டாலர் தேசம்

God created war so that Americans would learn geography – Mark Twain

எல்லாப் புத்தகக் கடைகளிலும் இப்புத்தகம் கண்ணில் பட்டாலும், அதன் தடிமனையும் விலையையும் பார்த்து, அதை வாங்குவதைத் தவிர்த்து வந்தேன். இந்தியா பாகிஸ்தான் இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியல் வரலாறு, தேவையான அளவிற்குத் தெரியும் என்பதும் இன்னொரு காரணம். சென்ற வருடம் மருத்துவமனைக்குப் புதுக்கோட்டைக்குச் சென்றிருந்த ஒரு நாளில், புத்தகக் கண்காட்சி சுவரொட்டிகள் கண்டேன். அதுவும் நான் 5 ஆண்டுகள் வாழ்ந்து திரிந்த வீதிகளுக்கு மிக அருகில் நடந்ததால், போய்விட்டேன். அங்கு 50 ரூபாய் தள்ளுபடியில் வாங்கிய புத்தகம் இது.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
ஆசிரியர்: பா.ராகவன்
வெளியீடு: மதி நிலையம்
முதல் ஈடு: ஏப்ரல் 2014
பக்கங்கள்: 864
விலை: ரூபாய் 550
வாங்கிய இடம்: புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி 2017
————————————————————————————————————————————————————————————————————————————
அமெரிக்கா, இரண்டாவது மிகப்பழமையான குடியரசு நாடு என நினைக்கிறேன். அதன் அரசியல் வரலாற்றை ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜார்ஜ் வாக்கர் புஷ் வரை சொல்வதே இப்புத்தகம். பங்குச்சந்தை வீழ்ச்சியும், டென்னசி பள்ளத்தாக்கும் எனக்கு ஒன்பதாம் வகுப்பில் ஏன் சொல்லிக் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. உட்ரோ வில்சன், தியோடர் ரூஸ்வெல்ட், இரண்டு உலகப் போர்கள் பற்றி பத்தாம் வகுப்பில் படித்தேன். உலகில் நடந்த பெரும் போர்கள் பற்றி படித்த போது கொரியப் பிரிவினை, வியட்நாம் யுத்தம், வளைகுடாப் போர், பனிப்போர், அணுவாயுதம், ஆப்கான் யுத்தம் தெரிந்து கொண்டேன். உலக கிசுகிசுகள் படித்தபோது ஜான் கென்னடியையும், பில் கிளிண்டனையும் தவிர்க்க முடியவில்லை. பாஸ்டன் தேநீர் விருந்து என்ற அற்புதமான நிகழ்வையும், வாட்டர்கேட் ஊழல் என்ற கேவலமான நிகழ்வையும் எப்படியோ தெரிந்து கொண்டேன்.

இதே தளத்தில் எழுதிய 24, 101, 108, 143வது புத்தகங்கள் மூலம் உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்த கொடுமைகள் தெரிந்து கொண்டேன். படுகொலை செய்யப்பட்ட இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் மூலம் மருத்துவ உலகம் அறிய முயன்ற உண்மைகள் பற்றியும், உட்ரோ வில்சனுக்கு இருந்த விசித்திரமான வியாதி பற்றியும் 150வது புத்தகம் மூலம் தெரிந்து கொண்டேன். Kitchen Cabinet தெரியும். Petticoal Affair இப்புத்தகத்தில் தான் முதன்முதலில் படித்தேன். இப்படி துண்டுதுண்டாக நான் அறிந்த விடயங்களைக் காலக் கோர்வையாக மீள்வாசிப்பு செய்த அனுபவம் எனக்கு. அமெரிக்காவைப் புரிந்து கொள்ள சாமானியர்களுக்கும் இப்புத்தகம் கண்டிப்பாக உதவும்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)