180. THE DISAPPEARING SPOON

சில எழுத்தாளர்களைத் தொடர்ந்து படிக்கத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சாம் கீன். இத்தளத்தில் நான் எழுதிய 150வது புத்தகம் மூலம் எனக்கு அறிமுகமானவர். வாசகனைப் புத்தகத்தோடு கட்டிப் போடும் எழுத்து அவருடையது. அறிவியலை எளிய மொழியில் சுவாரசியமாக எழுதுபவர். அவரின் இன்னொரு புத்தகம் தான் இது. விலை அதிகமாக இருப்பதால், அமெரிக்காவில் வேலை பார்க்கும் இருவேறு நண்பர்களிடம் பரிசாகக் கேட்டேன். இருவரும் கண்டிப்பாக சரி என்று சொல்லிவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். இங்கிருக்கும் மலையாள நண்பன் ஒருவன் விலைத் தள்ளுபடியில் வாங்கித் தந்தான்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The Disappearing Spoon
ஆசிரியர்: Sam Kean
வெளியீடு: Back Bay Books
முதல் ஈடு: 2010
பக்கங்கள்: 410
விலை: ரூபாய் 850 என நினைக்கிறேன்
வாங்கிய இடம்: அமேசானில் நண்பன் ஒருவன் வாங்கித் தந்தான்
————————————————————————————————————————————————————————————————————————————
The periodic table of the elements in Chemistry. வேதியியலில் தனிம வரிசை அட்டவணை. அதிலுள்ள தனிமங்களின் கதை தான் இப்புத்தகம். அந்த அட்டவணை தற்போதைய வடிவத்தை எப்படி பெற்றது? ஒவ்வொரு தனிமத்தையும், தனிமங்களின் கூட்டத்தையும் எப்படி விஞ்ஞானிகள் தேடித்தேடிக் கண்டுபிடித்தனர்? அவ்விஞ்ஞானிகளின் விசித்திரக் கதைகள். பிரித்தெடுக்கப்பட்ட பின் பெயர் வைக்கப்பட்ட தனிமங்கள். பெயர் வைத்துவிட்டு பின்னர் பிரித்தெடுக்கப்பட்ட தனிமங்கள். கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும் சில பக்கத்துப் பக்கத்துத் தனிமங்கள். போருக்கான தனிமங்கள். அரசியலுக்கான தனிமங்கள். பணத்துக்கான தனிமங்கள். கலைக்கான தனிமங்கள். மருத்துவத்திற்கான தனிமங்கள். இப்படி பல விடய‌ங்களைச் சொல்கிறது இப்புத்தகம். IUPAC, ஆற்றல் மட்டங்கள் (Energy Levels) என்று என்றோ படித்தவற்றை மீண்டும் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

TheDisappearingSpoon

(www.samkean.com)

இந்த வருட உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உலகையே தேட வைத்த குரோஷியா போல், தனது தாயகமான போலந்து நாட்டின் விடுதலைக்கு உலகத்தின் கவனத்தை ஈர்க்க, தனது கணவருடன் பிரித்தெடுத்த புதிய தனிமத்திற்குப் பொலோனியம் (Po) என மேரி க்யூரி பெயரிட்டது. டின் (Ti) கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், அது குறைந்த வெப்பநிலையில் நெகிழ்ந்துவிடும் தன்மை தெரியாமல், ரஷ்யாவைத் தாக்கப் போன நெப்போலியனின் படைவீரர்களின் கவசம் கிழிந்து உள்ளாடைகள் தெரிந்தது. உடல் ஜொலிக்க சிலர் தங்கத்தைச் சாப்பிடுவது போல, வெள்ளியின் (Ag) மருத்துவ குணங்களைக் கேள்விப்பட்ட பலர், அதைத் தினமும் குடித்து, திருநீலகண்டர் போல் உடம்பெல்லாம் நீலமாகித் திரிந்தது.

மனநிலையைச் சீராக்க, அதுவும் இரவில் மட்டுமே செயல்படும் மருந்தாகப் பயன்படும் லித்தியம் (Li). ஜப்பானில் இடாயிடாய் நோயை உண்டாக்கிப் போன காட்மியம் (Cd). MRI ஸ்கேன்களில் பயன்படும் கடொலோனியம் (Gd). எலும்புகளை இணைக்கப் பயன்படும் டைடானியம் (Ti). தங்கத்துடன் வேதிவினை புரியும் ஒரே தனிமமான டெல்லுரியம் (Te). புத்தகத்திற்கு இப்பெயர் கொடுத்த ஹேலியம் (Ga). உயிருடன் இருக்கும் ஒரு மனிதனின் பெயரிடப்பட்ட ஒரே தனிமமான சீபோர்கியம் (Sg). இப்படி பல தகவல்கள்.

பிடல் காஸ்ட்ரோவின் காலுறைகளில் தாலியம் (Tl) தடவி, அவரின் புகழ்பெற்ற தாடியை உதிரச் செய்ய அமெரிக்க உளவுத்துறை திட்டம் போட்டதாம். அவர்களால் ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை என்பது வரலாறு. தனிம வரிசை அட்டவணையை முதலில் உண்டாக்கிய டிமிட்ரி மென்டலீவ், பாதிரியாருக்கு லஞ்சம் கொடுத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள‌, விடயம் சார் மன்னருக்குப் போகிறது. அதற்கு மன்னர் சொன்னாராம்: ‘ஒத்துக் கொள்கிறேன். மென்டலீவ் இரண்டு மனைவிகள் வைத்திருக்கிறார். ஆனால் எனக்கு ஒரேயொரு மென்டலீவ் தான் இருக்கிறார்’.

பெரியம்மைக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் ஒரு பதிவு பெற்ற மருத்துவரே கிடையாதாம். எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்து, இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற ரான்ட்ஜனுக்கு நிறக்குருடு. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த புன்சன் விளக்கை அவர் கண்டுபிடிக்கவில்லையாம்; ஏற்கனவே இருந்த ஒரு விளக்கை கொஞ்சம் மாற்றி அமைத்து வரலாற்றில் பெயர் பெற்றுக் கொண்டாராம். ஜெர்மானியத்தை (Ge) வைத்து அனைத்து ஆய்வுகளும் செய்யப்பட, கடைசியில் அதன் இடத்தில் சிலிக்கன் (Si) சிப்புகளுக்குள் வந்து கணினித்துறையில் கோலோச்சுகிறது.

உலகெல்லாம் மிகவும் பிரபலமான தனிமமான அலுமினியம் (Al) பற்றி ஒரு தகவலுடன் முடித்துக் கொள்கிறேன். aluminium என்பதுதான் உலகம் முழுதும் பயன்படுத்தப்படும் பெயர். ஆனால் அமெரிக்காவில் aluminum. ஒரு i கிடையாது. அலுமினியம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், அது அமெரிக்காவில் விளம்பரப்படுத்தப் பட்டபோது ஒரு i யை விட்டுவிட்டார்கள். ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் கதாகாலாட்சேபப் பாடலில் எம்ஜிஆர் சொல்வது போல், அதிகாரி ஆச்சே என்று தவறை அப்படி ஏற்றும் கொண்டார்கள். ‘அவர்கள் நாகபதனி சாதி; நாங்கள் நாகப்பதனி சாதி. எங்களுக்கு ஒரு ப் அதிகமாக வரும்’!.

எனது கொள்ளளவிற்கு அதிகமான அறிவியல் சொல்லும் புத்தகம் இது. சில பகுதிகள் சுத்தமாகப் புரியவே இல்லை. கல்லூரியில் நான் படித்த வேதியியல் அப்படி. அது என் தவறு. கண்டிப்பாக வேதியியல் பிரியர்களுக்குப் பிடிக்கும். இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் சொல்லும் கெமிஸ்ட்ரி இல்லீங்கோவ்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)