181. JAYA (AN ILLUSTRATED RETELLING OF THE MAHABHARATA)

māṁ hi pārtha vyapāśhritya ye ’pi syuḥ pāpa-yonayaḥ
striyo vaiśhyās tathā śhūdrās te ’pi yānti parāṁ gatim
பாவ யோனியில் பிறந்தவர்கள், வணிகர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் கூட என்னிடம் வந்தால், அவர்கள் உயர்நிலை அடைய நான் உதவுவேன்.
– பகவத் கீதை 9:32

இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டியது மட்டும்தான் மிச்சம் என்றார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர். கொதித்தெழுந்த மதச்சார்பற்றவர்களும், வைணவர் அல்லாதவர்களும் ஊடகங்களில் காரசாரமாக விவாதித்தார்கள். பெரியாரும் அம்பேத்கரும் ஏற்கனவே பலமுறை அடித்துக் கிழித்த விடயங்கள் என்பதால், நான் கண்டு கொள்ளவில்லை. இந்த கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளை ஒருமுறை ஒழித்துவிட்டால், மீண்டும் வீரியம் கொண்டு திரும்ப வந்து தாக்கும் இல்லையா? ஏற்கனவே அழித்த மருந்துகள் அப்போது வேலை செய்யாமல் போகும் இல்லையா? அதுபோல், பெரியாரும் அம்பேத்கரும் கொடுத்த மருந்துகளில் கொஞ்சம் மட்டும் தெரிந்த எனக்கு புதுக் கிருமிகளைச் சமாளிக்க முடியவில்லை. என் முன்னோர்கள் எச்சரித்த ஒன்றில் அப்படி என்னதான் இருக்கிறது என்றறிய, மூக்கை மூடிக் கொண்டு நானே களத்தில் குதித்துவிட்டேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: JAYA (AN ILLUSTRATED RETELLING OF THE MAHABHARATA)
ஆசிரியர்: Devdutt Pattanaik
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 2010
பக்கங்கள்: 350
விலை: ரூபாய் 499
வாங்கிய இடம்: Crossword
————————————————————————————————————————————————————————————————————————————
ஒருத்தி சிரிக்கக் கூடாத இடத்தில் சிரித்தாள்; அதுதான் மகாபாரதம் என்றார் வைரமுத்து. 18 அதிகாரங்களும், ஒரு இலட்சம் செய்யுள்களும் கொண்ட உலகின் மிகப்பெரும் காவியம். கிரேக்கப் பேரிலியக்கியங்களான எலியட்டையும் ஒடிசியையும் சேர்த்தால் கூட, மகாபாரதம் தான் பெரியது. பங்காளிச் சண்டைகளின் காவியம் என்பதாலும், ஆபாசம் சற்று அதிகம் என்பதாலும் குடும்பங்களில் சொல்லித் தரமாட்டார்கள் என்பது பொதுக்கருத்து. சந்தையில் பல மகாபாரதங்கள் கிடைக்கும். தொலைக்காட்சிகளிலும் யூடியூப்பிலும் பல விதங்களில் காணக் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இந்து மதத் தத்துவங்களைத் தீவிரமாக ஆராய்பவர் இவர். ஆனால் மதவாதி அல்ல. மதவாதிகளே இவரைத் திட்டுவதில் இருந்து, இவர் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம். தவிர, ஒருமுறை இவரைப் படித்து அல்லது கேட்டுவிட்டால், உங்களுக்கே தெரியும், இவர் அறிவார்ந்த வேறுரகம் என்று. இந்தோனேசிய மகாபாரத்தில் குந்தியின் காதில் இருந்து பிறந்தவன் கர்ணன், ஆதலால் அங்கு அவள் கன்னியே போன்ற தகவல்களை இவரிடம் தான் பெறமுடியும். கடவுளர்களும் முனிவர்களும் பிள்ளை வரம் தரும் இடங்களில் உண்மையிலேயே என்ன நடந்திருக்கும், பெண் என்பவள் தனக்கான இடத்தைச் சமூகத்தில் படிப்படியாக எப்படி இழக்கிறாள் என்று இவரால் மட்டுமே வாசகனைச் சிந்திக்க வைக்க முடியும்.

Jaya

(www.amazon.in)

ஏகலைவனின் கட்டைவிரலை கேட்டது சாதி இல்லையா? கர்ணனின் திறமை மறுத்தது வர்ணாசிரமம் இல்லையா? எட்டாவது பிள்ளைதான் தன்னைக் கொல்லப் போகிறது என்று தெரிந்த கம்சன், ஏன் அவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்து ஏழு பிள்ளைகளைப் பெறவைத்து ஒவ்வொன்றாக கொன்றான்? தான் மட்டும் மூன்று பேருடன் முடித்துக் கொண்ட குந்தி, தன் மருமகளை மட்டும் ஏன் ஐந்து பேருக்குப் பங்கிட்டாள்? என்னை வைத்து தன்னை இழந்தானா, இல்லை தன்னை வைத்து என்னை இழந்தானா? வெறி கொண்டு திரண்டு நிற்கும் படைகளுக்கு இடையே, அவ்வளவு பெரிய பகவத் கீதை எப்படி? பிறப்பால் ஒதுக்கப்பட்ட தொழில் தர்மத்தைத் தவிர வேறேதும் செய்யக் கூடாதென கர்ணனை ஒதுக்கிவிட்டு, பிராமணனான துரோணர் பரசுராமர் மட்டும் எப்படி போர்த்தொழில் செய்யலாம்? பாண்டுவிற்கே பிறக்காதவர்கள் பாண்டவர்கள். பங்குதாரர்களைக் கேட்காமல் மனைவியை அடகுவைத்து, வாட்ஸ் அப் இல்லாத காலத்திலேயே வதந்தியைப் பரப்பி குருவின் சாவிற்குக் காரணமானவன் பெயர் தர்மர். மூன்று பெண்களைக் கடத்திக் கொண்டு போய், மாதவிலக்கான ஒருத்தி சபையில் துகிலுறியப் பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் தான் எல்லா நீதி நியாயங்களும் தெரிந்த பிதாமகரா? இப்படி லெமூரியா கண்டக் காலத்து கேள்விகள் எல்லாம் எனக்கு இப்புத்தகம் படித்த பிறகுதான் புரிந்தன.

பஞ்ச பாண்டவர்களில் மூவரைப் பெற்றெடுக்க மூன்று கடவுள்களைக் கூப்பிட்ட குந்தி, நான்காவதாக ஐந்தாவதாக யாரையும் கூப்பிடவில்லை. நல்லவர்களாகச் சொல்லப்பட்ட பாண்டவர்கள் நரகம் போனார்கள். கெட்டவர்களாகச் சொல்லப்பட்ட கவுரவர்கள் சொர்க்கம் போனார்கள். இவற்றிற்குப் பின்னுள்ள உன்னத தத்துவங்களைப் படித்து தெரிந்து கொண்டேன். பீஷ்மரின் பெற்றோர்கள் இந்திரசபையில் பெற்ற சாபங்கள். மனைவியைக் கூட தொட முடியாத பாண்டுவின் சாபத்திற்குக் காரணமான சம்பவம். துரோணர் பிறந்த முறை. உடலுறவில் கண்ணை மூடிக் கொண்டால், குழந்தை குருடாகப் பிறக்கும் அதிசயம். இறந்த தகப்பனின் பிணத் துண்டுகளைத் தின்று, முக்காலங்களைக் கணிக்கும் ஆற்றல் பெற்ற மகன். தூக்கத்தில் சிந்திய விந்துவை இலையில் சேகரித்து, ஒரு பறவையிடம் கொடுத்து, வீணாக்காமல் தன் மனைவியிடம் சேர்க்கச் சொன்ன கணவன். மனைவியை மகன்களைப் பகிர்ந்து கொள்ள செய்த தாய். மருமகனை மலடாகச் சாபமிட்ட மாமனார். இன்னொரு ஆணைத் தன் மனைவியைக் கர்ப்பமாக்கச் சொன்ன கணவன். ஆஹா! வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் எத்தனை கதாப்பாத்திரங்கள்!

மகாபாரதம் தலைசிறந்த காவியம் என்பதை மறுப்பதற்கில்லை. கடவுள் பகுத்தறிவு போன்ற சித்தாந்தங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு படித்தால் அற்புதமான கதையாடல். ஏகலைவன் போல் ஒதுங்கி நின்று படித்தாலே போதுமானது. பகவத் கீதையை இடையில் சொருகியது போல், மதச்சார்பற்ற நாட்டில் இதை மக்களின் தேசப்பற்றுடன் சேர்க்கும் போதுதான் சிக்கலே. பெரியாரும் அம்பேத்கரும் கொடுத்த தடுப்பூசிகள் போதாதென்று, நீங்களும் படித்து நோய் எதிர்ப்பு சக்தி பெறுவீர்.

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)