182. SITA (AN ILLUSTRATED RETELLING OF THE RAMAYANA)

இந்தியர்கள் அனைவரும் இராமரின் பிள்ளைகள்; இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வேறமாதிரி என்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மகாத்மா காந்தி முதல் பலர் இராமராச்சியம் வேண்டும் என்கிறார்கள். பெரியாரும் அம்பேத்கரும் ஏற்கனவே பலமுறை அடித்துக் கிழித்த விடயங்கள் என்பதால், நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஒருமுறை பெரியாரைக் கேட்டார்கள்: ‘சாமி இல்லை, சாமி இல்லை என்று சொல்லிக் கொண்டு ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று போராடுகிறீர்கள்?’. பெரியார் சொன்னார்: ‘அவனை உள்ளே விட்டால், அவனே போய் பார்த்து தெரிந்து கொள்வான், உள்ளே இருப்பது சாமி இல்லை, வெறும் கல் என்று’. நானும் என்னதான் இருக்கிறது என்று பார்க்க, இப்புத்தகத்திற்குள் நுழைந்துவிட்டேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: SITA (AN ILLUSTRATED RETELLING OF THE RAMAYANA)
ஆசிரியர்: Devdutt Pattanaik
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 2013
பக்கங்கள்: 318
விலை: ரூபாய் 499
வாங்கிய இடம்: Crossword
————————————————————————————————————————————————————————————————————————————
ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்கவில்லை; அதுதான் இராமாயணம் என்றார் வைரமுத்து. சமஸ்கிருதத்தில் வால்மீகியின் இராமாயணம் 7 காண்டங்களும், 24000 பாடல்களும் கொண்ட காவியம். அதன் பிறகு 22 நூற்றாண்டுகளாக அதைத் தழுவி பல நாடுகளில், பல மொழிகளில் , பல இராமாயணங்கள். சில மதங்களும் கூட இராமாயணப் பாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டன. 300 இராமாயணங்கள் என்று ஏ.கே.இராமனுஜன் ஒரு கட்டுரை எழுதப் போய், அது பெரும் பிரச்சனை உண்டாக்கிய நிகழ்வு நினைவிருக்கிறதா? சமண பதிப்பில் இராமருக்கு 4 மனைவிகள். புத்த பதிப்பில் இராவணனே கிடையாது. மலேசியாவில் ஆதாமின் கொள்ளுப் பேரன் தசரதன். கம்போடியாவில் சீதைக்கு இராவணன் தகப்பன். காலங்காலமாக தமிழ்நாட்டில் இருக்கும் சீதளப்பழத்தைச் சீத்தாப்பழம் என்று நாமும் இராமாயணத்துடன் சேர்த்து நம்பிக் கொண்டிருக்கிறோம். தமிழில் கம்பர் 6 காண்டங்களை மட்டும் மொழிப்பெயர்த்தார். கடைசி காண்டத்தை ஒட்டக்கூத்தர் செய்தார். இராமராஜ்யம் என்ற திரைப்படம் தான் மகாத்மா காந்தி பார்த்த ஒரே சினிமா.

Sita

(www.amazon.in)

சந்தையில் பல இராமாயணங்கள் கிடைக்கும். தொலைக்காட்சிகளிலும் யூடியூப்பிலும் பல விதங்களில் காணக் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இந்து மதத் தத்துவங்களைத் தீவிரமாக ஆராய்பவர் இவர். ஆனால் மதவாதி அல்ல. மதவாதிகளே இவரைத் திட்டுவதில் இருந்து, இவர் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம். தவிர, ஒருமுறை இவரைப் படித்து அல்லது கேட்டுவிட்டால், உங்களுக்கே தெரியும், இவர் அறிவார்ந்த வேறுரகம் என்று. லெட்சுமண ரேகை என்பது வால்மீகி சொல்லவில்லை, சிறிலங்காவில் அப்போது சிங்கமே கிடையாது, குதிரைகள் எல்லாம் ஆரியர்களுடன் இந்தியாவிற்குள் வந்தவை, Stockholm syndrome, Shankhavali, வீரபாகுவின் Reverse Devotion என்று இவரால் மட்டுமே வாசகனைச் சிந்திக்க வைக்க முடியும்.

லவகுசா ஒன்றாகப் பிறந்த இரட்டையர்கள் இல்லை என்று தெரிந்து கொண்டேன். மகனற்ற தசரதனுக்கு ஒரு மகள் இருந்தாள் என்றும், அவள்தான் தன் தகப்பனுக்கு மகன்கள் பிறக்க உதவினாள் என்றும் தெரிந்து கொண்டேன். ABT parcel service சஞ்சீவ மலையைத் தூக்கிச் செல்லும் அனுமன் தான் பலசாலி என்றால், சஞ்சீவ மலையுடன் அனுமனையே தூக்கிச் சென்ற பலசாலியையும் தெரிந்து கொண்டேன். ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டுவிட்டு அமெரிக்கா சொன்ன காரணம் போல், கும்பகர்ணனின் அதீத தூக்கத்திற்குச் சொல்லப்பட்ட அற்புத வரத்தை எண்ணி அதிசயித்துப் போனேன். கருவில் இருந்த போதே தந்தையின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய மகனைச் சபித்த தந்தையைக் கண்டேன். பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் எலும்பும் நரம்பும் இல்லாமல் குழந்தை பிறக்கும், காதில் விந்தை ஊற்றினால் குழந்தை பிறக்கும் எனத் தெரிந்து கொண்டேன். அஸ்வமேத யாகம், அருந்ததி கதை அருவருக்கத்தக்கது.

ஒற்றைக் கொம்பு காண்டாமிருக இறைச்சியைச் சாப்பிட்ட பிறகுதான் இவ்வுலகை விட்டு நீங்குவேன் என்று அடம்பிடித்த தசரதன். ஆசையாய் சீதை கேட்ட மானைக் கொல்லப் போன இராமன். அழகு யுவதியின் முலைகளில் இருந்து பால்பருகக் கேட்ட மூன்று முனிவர்கள். குருவின் மனைவியிடம் மாறுவேடத்தில் உறவு கொண்ட கடவுள். அந்த இடத்தில் இருந்த ஆறு பேருக்கும் வழங்கப்பட்ட நியாயமான விதவிதமான சாபங்கள். ஆஹா இறைவா! சரி இராமராச்சியம் இராமராச்சியம் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன பாலாறும் தேனாறும் ஓடியதா என்று தேடினேன். இராமனின் ஆட்சியில் இரண்டு சம்பவங்கள் தான்: ஒன்று மனைவியைச் சந்தேகப்பட்டு நாட்டைவிட்டு விரட்டியது. இன்னொன்று சம்பூகனைக் கொன்றது.

வாலியும் சுக்ரீவனும் பிரம்மனுக்குக் கொள்ளுப் பேரன்களாகப் பிறந்த கதையெல்லாம் அப்படியே குழந்தைகளுக்குச் சொல்ல முடியுமா? எல்லாவற்றையும் துறந்து வனவாசம் போனவர்களிடம் கணையாழி எப்படி இருந்தது? மறைந்திருந்து வாலியைக் கொன்றது போகட்டும், சம்பூகனை எதற்காக கொன்றீர்கள்? Anti–Indian! இவையெல்லாம் எம்மைப் படிக்கத் தூண்டும் பரிவார்களுக்கு நன்றி!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)