184. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

(கீழடிக்குச் சமர்ப்பணம்)

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்’
என்று தமிழ் நிலத்தின் வடதென் எல்லைகளைச் சொல்கிறது தொல்காப்பியம். கேரளமும் சேர்ந்த அன்றைய தமிழ் நிலத்தில், எல்லா எதிரிகளும் வடக்கில் இருந்தே வந்ததால், பண்டைய தாய்த்தெய்வக் கோவில்கள் எல்லாம், இரத்தப்பலி கேட்டு வடக்கு நோக்கியே இருந்தன. இராவணனின் தம்பி இலங்கையில் இருந்து வழிபட வேண்டும் என்பதற்காக, தெற்கு நோக்கிக் கட்டப்பட்ட ஸ்ரீரங்கக் கோவில் பற்றி எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. ‘வில்லை வளைக்கச் சொன்னால், எவன்டா ஒடித்தது?’ என்று வெகுஞ்சினங் கொண்டு கோடாரியை ஓங்கிய பரசுராமர், ஒடித்தது இராமர் என்று தெரிந்ததும், கோடாரியை வீசி எறிய, அது நிலத்தை வெட்டி உயர்த்தி மேற்குத் தொடர்ச்சி மலைகளை உண்டாக்கியது. தமிழ் நிலத்தில் இருந்த கேரளம், சமஸ்கிருதம் கலந்து பிரிந்தும் போனது. கடல்கோள் பருவநிலை அரசியல் என்று பல காரணங்களால் தமிழ் எல்லை மாற்றப்பட்டு இருக்கிறது. வடவேங்கடமான திருப்பதி இன்று இல்லை; சேதுபதியின் கச்சத்தீவும் இன்று இல்லை. சங்க காலத்தில் தமிழ் எல்லைகளைத் தொல்லியல், இலக்கியச் சான்றுகள் மூலம் ஆராய்வதே இப்புத்தகம்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்)
ஆசிரியர்: முனைவர் சி.இளங்கோ
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்
முதல் ஈடு: 2017
பக்கங்கள்: 160
விலை: ரூபாய் 120
வாங்கிய இடம்: சென்னை புத்தகத் திருவிழா 2018
————————————————————————————————————————————————————————————————————————————
திரைகடலோடி திரவியம் தேடிய தமிழர்கள், ரோமானியப் பேரரசுடன் வாணிபம் செய்தபோது, சூயஸ் கால்வாய் இல்லாத அக்காலத்தில், ஆப்பிரிக்காவைச் சுற்றியா பயணித்து இருப்பார்கள், என்று நான் யோசித்த காலங்கள் உண்டு. கஷ்மீரில் என் தேசம், உலகின் மிகப்பெரிய இராணுவத்தை நிற்க வைத்திருக்கிறதே, குறுமன்னர்கள் காலத்தில் எல்லைகள் எப்படி இருந்திருக்கும் என யோசித்ததுண்டு. வேங்கட மலை, பழனி மலை, பாரியின் பறம்பு மலை, கொல்லி மலை, ஜவ்வாது மலை, பொதிகை மலை, காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, மருங்கூர், தொண்டி, முசிறி துறைமுகம், உறையூர், கருவூர், வஞ்சி, கொடுமணல், மதுரை, காஞ்சி, தலையாலங்கானம், செங்கம் என்று ஊர்களையும் மலைகளையும் ஆறுகளையும் பற்றிய தகவல்களைக் கோர்த்துக் கோர்த்துப் பண்டைய காலத்தில் தமிழ்நிலம் எவ்வளவு எல்லைவரை இருந்திருக்கும் என்பதைச் சொல்கிறது இப்புத்தகம்.

ஊர்சுற்றித் திரியும்போது அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவன் நான். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள், வட இந்தியாவில் இருந்து என்றால், எந்த சந்தில் கிடைத்தது என்றுவரை விவரங்கள் இருக்கும். தென்னிந்தியா என்றால், வெறும் தென்னிந்தியா என்று மட்டும்தான் இருக்கும். பொதுவாக நான் கவனித்தது என்னவென்றால், சிந்து சமவெளி நாகரீகம் தான் உலகில் தொன்மையானது என நிரூபிக்க முயல்கிறார்கள். இறந்தவர்களை எரிக்காமல் அடக்கம் செய்த‌ அது இந்துக்களின் நாகரீகம் என நிரூபிக்க, சரஸ்வதி நதியைத் தேடச் சொல்லி அரசு நிதி ஒதுக்குகிறது. அப்பகுதிகள் இப்போது பாகிஸ்தானில் இருப்பதால், குஜராத்தில் உள்ள ஒருபகுதியை அதற்கு இணையாக அரசே விளம்பரப் படுத்துகிறார்கள். கீழடியில் நடக்கும் வஞ்சத்தைக் காணக் கிடைத்த நம்காலத்தில், இதுபோன்ற புத்தகங்கள் நமக்கும் நமது தலைமுறைகளுக்கும் கட்டாயம் தேவை என்பேன்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)