186. பெரியபுராணக் கதைகள்

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.
– கவிஞர் அறிவுமதி

ஆண்டாள் என்ற மிகப்பெரிய சர்ச்சையுடன் தொடங்கியது இவ்வருடம். நானும் சேரலாதனும் 10 வருடங்களுக்கு முன் தென் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணம் சென்றபோது, திருவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் போக முயன்றோம். புகைப்படக் கருவியுடன் காவலர் அனுமதிக்காததால் கோவிலுக்குள் செல்லவில்லை. 5 வருடங்களுக்கு முன் நண்பனின் திருமணத்திற்குச் சென்றிருந்த போதும், கோவிலுக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வவ்வால்கள் கூச்சலிடும் அந்தக் கோவில் மரம் இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழக அரசின் சின்னமாக இருக்கும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் மூலம், தமிழக அரசியலின் ஆழம் பார்க்க சிலர் முற்பட்டனர். கவிஞர் நந்தலாலா சொன்னதுபோல, ‘வைரமுத்து அப்படி சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்; ஆனால் அப்படி சொல்வதற்கு வைரமுத்துவிற்கு எல்லா உரிமையும் உண்டு’ என்பவன் நான்.

ஒருவகையில் இந்த மதவாதிகளுக்கு நான் நன்றி கூறுவேன். புத்தகங்களைத் தேடித்தேடி என்னைப் படிக்க வைப்பதால். மாட்டுக்கறி பிரச்சனையில் ரிக்வேதம் முதல் காந்தியின் சுயசரிதை வரை. பகவத் கீதை பிரச்சனையில் மகாபாரதம். இராமர் பிரச்சனையில் இராமாயணம். அவுரங்கசீப் பிரச்சனையில் முகலாயச் சரித்திரம். நீளும் இப்பட்டியலில், ஆண்டாள் பிரச்சனை மூலம் 12 வைணவ ஆழ்வார்கள் பற்றி படிக்க ஆயத்தமானேன். ஆண்டாள் பற்றி எல்லாவற்றையும் அப்போதைய ஊடக‌ங்களே சொல்லிவிட்டன. அடுத்ததாக திருமங்கை ஆழ்வார் பற்றி படித்தேன். No comments. ஆழ்வார்கள் கதையை அப்படியே மூடிவைத்து விட்டு, 63 சைவ நாயன்மார்கள் பற்றி படித்தறிய இப்புத்தகம் கொண்டேன்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பெரியபுராணக் கதைகள்
ஆசிரியர்: ஆதிரையார்
வெளியீடு: குமரன் பதிப்பகம்
முதல் ஈடு: ஆகஸ்டு 2017
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 150
வாங்கிய இடம்: சென்னை புத்தகத் திருவிழா 2018
————————————————————————————————————————————————————————————————————————————
உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
என்று கடவுள் வாழ்த்தாக பள்ளியில் படித்தது. வாழ்க்கைப் புராணமே பெரிய்ய்ய்ய்ய புராணமாகப் போய்விட்ட இக்காலத்தில், நான் பெரிய புராணத்தைத் தேடிப் படிப்பேன் என்று நினைத்ததே இல்லை. பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம், சோழப் பேரரசின் முதலமைச்சராக இருந்த சேக்கிழாரால் 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. சைவத் திருமுறைகளுள் 12ம் திருமுறை. நாயன்மார்கள் 63 பேர், தொகை அடியார்கள் 9 பேர் என 72 பேரின் ஊர், சாதி, குலம், தொழில், நட்சத்திரம் எல்லாம் சொல்கிறது இப்புத்தகம். மாதொருபாகன், ஆண்டாள் போல இன்னும் பல பிரச்சனைகளை மதவாதிகள் கொண்டு வருவார்கள். திருமங்கை ஆழ்வார் என்ற ஒரேயொரு ஆழ்வாரும், கீழ்க்கண்ட 10 நாயன்மார்களும் உங்களின் அறிவுக்கு அப்போது தேவைப்படுவார்கள்.
திருநீலகண்டர்
இயற்பகையார்
கண்ணப்பர்
திருநாளைப்போவார் என்கிற நந்தனார்
குலச்சிறையார்
நமிநந்தியடிகள்
தண்டியடிகள்
கழ‌ற்சிங்கர்
கோட்புலியார்
கோச்செங்கட்சோழர்

அனுபந்தம்:
––––––––––––
1 பெரும்பாலான நாயன்மார்களின் கதை, சமணர்களை அடக்கியாண்ட பெருமை பேசுபவை. மதுரை அருகில் சாமநத்தம் என்றொரு கிராமம். 1300 வருடங்களுக்கு முன் மதத்தின் பெயரால், நாயன்மார்களின் முதல்வரான திருஞானசம்பந்தர் முன்னிலையில், ‘பெரிய புராண’க் கணக்கின்படி 8000 பேர் கழுவேற்றிக் கொல்லப்பட்ட ஊர். இன்றும் இப்பெருமையை மதுரை, ஆவுடையார் கோவில்களில் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் காணலாம். அக்கழுவேற்றலை ஈழத் தமிழர்களுக்குச் சிங்கள இராணுவமும் செய்தது.

2. ஒருநாள் திருவாரூர்க் கோவிலுக்குள் பார்ப்பனர்கள் யாகம் செய்துகொண்டிருந்தனர். அந்த வேள்வியின் பயனாகச் சிவபெருமான் ஒரு பறைமகன் வேடத்தில் செத்த கன்றுக் குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வேள்விக் கூடத்திற்குள் வந்துவிட்டார். வந்தவர் சிவபெருமான் என்று உணராத பார்ப்பனர், ‘பறையன் உள்ளே வந்துவிட்டான்; யாகம் தீட்டுப்பட்டு விட்டது’ என்று கத்திக் கொண்டே வெளியே ஓடிவிட்டனர். சினங்கொண்ட சிவபெருமான், ‘நீங்களும் பறையன் ஆகுங்கள்’ என்று சாபம் கொடுத்துவிட்டார். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு பார்ப்பனர்கள் கெஞ்சினர். மனம் இரங்கிய சிவபெருமான், நிரந்தரமாகப் பறையனாவதற்குப் பதில் ‘நாள்தோறும் நண்பகல் முதல் ஒரு நாழிகை நேரம் மட்டும் பறையனாய் இருப்பீர்களாக’ என்று சாப விமோசனம் தந்தார். அதன்படியே திருவாரூர்க் கோவில் பார்ப்பனர்கள் நண்பகலில் ஒரு நாழிகை நேரம் பறையர்களாகி விடுகிறார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. இதனால் திருவாரூர்ப் பார்ப்பனர்களுக்கு ‘மத்தியானப் பறையர்கள்’ என்ற பெயர் ஏற்பட்டது. பறையரானவர் மீண்டும் பார்ப்பனராக தீட்டுக் கழிக்க வேண்டும். எனவே திருவாரூர்க் கோவில் பார்ப்பனர்கள் மத்தியானம் ஒருமுறை குளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இவ்வழக்கம் அண்மைக் காலம் வரை நீடித்திருந்தது. இப்படி ஒரு செய்தியைத் தனது ‘அறியப்படாத தமிழகம்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற இரண்டு புத்தகங்களிலும் சொல்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன். ஒரு பிறவியில் பிறந்த சாதியை மாற்ற முடியாதென ‘இப்பிறவி போய் நீங்க எரியினிடை மூழ்கி வா’ என்று சூத்திரர் நந்தனாருக்குச் சொன்னார் சிவபெருமான். ஆனால் திருவாரூர் பார்ப்பனர்களுக்குத் தினமும் இரண்டு சாதிகளுக்கு மாறிக்கொள்ள வரமளித்திருக்கிறார் அதே சிவபெருமான்! சூத்திரனைச் சாகச் சொன்ன சிவபெருமான், பார்ப்பனர்களுக்குச் சாப விமோசனம் தந்திருக்கிறார்! God is Great!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)