188. THE TELL–TALE BRAIN: UNLOCKING THE MYSTERY OF HUMAN NATURE

‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல’
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அப்படியே கட்டிப் போட்டுவிடும் பாட்டு இது!. ‘எவடே சுப்ரமணியம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இதே மெட்டில் ஒரு பாடல் உண்டு. அர்த்தமே புரியாவிட்டாலும் தெலுங்கிலும் இது என்னைக் கட்டிப் போட்டது. இப்படி நமக்கெல்லாம் நன்கு தெரிந்த இப்பாடலின் அடுத்த வரிகளைக் கேட்டால்,
‘வந்து வந்து போகுதம்மா
எண்ணம் எல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்’
இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும், இவ்வளவு தூரம் பொறுமையாக படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலரும் மிக இயல்பான மூளையுடைய மனிதர்கள். எண்ணம் எல்லாம் வண்ணம், எண்ணங்கள் மாறும் போது அந்த வண்ணங்களும் மாறும். அதாவது ஒன்று என்று நினைத்தால் ஒரு வண்ணம். இரண்டு என்று நினைத்தால் இன்னொரு வண்ணம். நூற்று இருப‌த்து ஒன்று என்று நினைத்தால் வண்ண வண்ணங்கள். இதை அப்படியே கவிதைக்குப் பொய்யழகு என்று நாம் கடந்து போய்விடக் கூடும். உள்ளது உள்ளபடி உண்மையைச் சொல்வதாக கவிஞர் வாலியும் எழுதிவிட்டார். நம்மில் பலரால் புரிந்துகொள்ள முடியாதபடி, உண்மையிலேயே கவிஞருக்கு எண்ணங்களும் வண்ணங்களும் கைகோர்த்து இப்படித்தான் வந்து போயினவா?
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: THE TELL–TALE BRAIN: UNLOCKING THE MYSTERY OF HUMAN NATURE
ஆசிரியர்: V.S.Ramachandran (வில்லியனூர் இராமச்சந்திரன்)
வெளியீடு: Penguin
முதல் ஈடு: 2012
பக்கங்கள்: 506
விலை: ரூபாய் 499
வாங்கிய இடம்: Landmark, பெங்களூரு
————————————————————————————————————————————————————————————————————————————
‘சூரியன் உதிப்பது யாராலே?’ என்று கடவுளை உருவாக்கிக் கொள்கிறது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று அக்கடவுளையும் எதிர்க்கிறது. பூச்சியம் முதல் முடிவிலி வரை புரிந்து கொள்கிறது. இவ்வுலகில் தனது இருப்பையே கேள்வியும் கேட்டுக் கொள்கிறது. எல்லாம் இந்த ஒன்றரை கிலோ மூளைதான். கபாலத்திற்குள் பத்திரமாக அடங்கிக் கிடக்கும் அப்புதையலைப் புரிந்து கொள்ள முடியாமல் இன்னமும் மருத்துவ உலகம் திணறிக் கொண்டு இருக்கிறது. அலிபாபா போல் சிலர் அந்த சீசேம் குகையைச் சற்றே திறந்து மூடிய பொழுதுகளில் எல்லாம், சமயம் பார்த்து முடிந்த அளவு அப்புதையலைப் புரிந்து கொண்டது மருத்துவம். அதன் அடிப்படையில் அமைந்தது தான் இத்தளத்தில் இருக்கும் 150வது புத்தகம். அப்புத்தகத்தில், இல்லாத ஒன்றை எப்படி மூளை இருப்பதாகப் புரிந்து கொள்கிறது என்றொரு பகுதி உண்டு. Phantom என்று பெயர். அதில் அறிமுகமானவர் தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் வில்லியனூர் இராமச்சந்திரன்.

வலை பின்னும் சிலந்திக்கும், அடை செய்யும் தேனீக்களுக்கும், கூடு கட்டும் பறவைகளுக்கும் அழகு என்பதை உணர முடியும் என்றாலும், மனிதனுக்கு அழகை ஆராதிப்பதையும் தாண்டி கலையுணர்வு உண்டு. சிரிக்கும் பல விலங்குகள் உண்டு. நகைச்சுவை மனிதனுக்கு மட்டும்தான். சொல்வதைச் சொல்லிக் காட்டும் கிளிப்பிள்ளை. மொழி மனிதனுக்கு மட்டும்தான். நாம் கல்லெறிந்தால், திரும்பவும் கல்லெறியும் விலங்குகள் உண்டு. மனிதனால் மட்டும்தான் அக்கல்லால் கருவிகள் செய்ய முடியும். குரங்கிற்குக் கொஞ்சம் கற்றுக் கொடுத்தால், கொஞ்சம் நினைவில் கூட வைத்திருக்கும். சொற்களை வாக்கியமாக்கி, சீர் அடி தளை தொடை அணி சேர்த்து ஆலுமாடோலுமா, பேட்டாராப் பாட மனிதனால் மட்டுமே முடியும். மனிதமூளையின் சில விசித்திர குணங்கள் மூலம் அதைப் புரிந்து கொள்ள முயல்வதே இப்புத்தகம்.

பரிணாமப் பாதையில் குரங்கிலிருந்து வந்திருந்தாலும் மனிதமூளை எப்படி தனது அமைப்பில் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறது எனச் சொல்கிறது அறிமுக அத்தியாயம். Phantom பற்றியது முதல் அத்தியாயம். காணல் + அறிதல் பற்றி இரண்டாம் அத்தியாயம். எண்ணமெல்லாம் வண்ணம் தான் மூன்றாம் அத்தியாயம். மனித இனத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு நியூரான்களைப் பற்றி அடுத்த இரண்டு அத்தியாயங்கள். மொழியறிவு, கலையுணர்வு, அழகுணர்ச்சி, மனம் பற்றி தனித்தனி கட்டுரைகள். அதில் ஒன்பது விதிகள் மூலம் அழகு என்ற ஒன்றை நமது மூளை எப்படி புரிந்து கொள்கிறது என விளக்கும் கட்டுரை மிக அருமை. நமது பண்டைய கல்வெட்டுகள் முதல் தினத்தந்தி ஆண்டியார் வரை, பெண்ணின் முலைகளைப் பெரிதாகவும், இடுப்பைச் சிறிதாகவும் வடிவமைப்பதில் இருக்கும் அழகியலை இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். ஆகஸ்ட் ரொடின் (Auguste Rodin) உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு காலத்தில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்த தில்லை நடராசர் சிலையைப் பார்த்துவிட்டு, மெய்மறந்து போய் அதேபோல் நடன அசைவுகளை முயற்சி செய்ய, நம்மவர்கள் அவர் யார் என்று தெரியாமலேயே கைது செய்ய போய்விட்டார்களாம்! கலை பற்றிய கட்டுரையில் தான் இக்கதை படித்தேன்.

பூமி என்ற பசுவின் மடியை அளவுக்கு அதிகமாகக் கரக்காதீர்கள். இப்படி ஒரு புராணத்தில் யாரோ பசுவைப் பூமிக்கு உவமையாக்கி சொல்லி வைக்க, இன்று பூமியைக் கொன்று கொண்டே, பசுவைக் கொன்றதாக மனிதர்களைக் கொன்று திரியும் ஒரு கூட்டம் உண்டு. இப்படி உவமைகள் புரியாமல் இருக்கும் சிலர். பீச்சாங்கை என்ற பெயரில் ஒரு குறும்படமும், பெரும் படமும் வந்தன. அக்குறும்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். அதில் வருவது போல், தன் உடல் உறுப்பே தான் சொல்வதைக் கேட்காமல் சிலர். ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி போல் தடை இல்லாமல், ஓரே மூச்சில் எழுதிக் குவிக்கும் சிலர். தன் தாயையே தாய் இல்லை என சுய நினைவுடன் மறுக்கும் சிலர். அதே தாய் தொலைபேசியில் பேசினால் ஏற்றுக் கொள்ளும் சிலர். இந்தியத் தமிழர்கள் போல், சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தனது இயலாமையை உணராத அல்லது மறுக்கும் சிலர். எப்படி கோர்வையாகச் சிந்திக்கிறோம்? எப்படி சிரிப்பு வருகிறது? எப்படி சிலருக்கு மட்டும் கவிதை அருவி மாதிரி கொட்டுகிறது? கை விரல்களை மடக்கி புத்தர் காட்டுவது போல், மனிதன் தவிர வேறெந்த விலங்கும் செய்ய முடியாதா? Telephone, Munchausen, Couvade, Capgras என பல விசித்திர Syndromeகள் காணக் கிடைக்கும் புத்தகம் இது.

150வது புத்தகம் போல், இதன் நடை அவ்வளவு எளிமையானது இல்லை எனினும், மூளையின் விசித்திரம் பற்றி நம்மூர்க்காரர் ஒருவர் எழுதிய அசாதாரண புத்தகம் ஒன்றைப் படித்ததில் மகிழ்ச்சி.

அனுபந்தம்:
———–
இப்புத்தகம் படித்த‌போது எனக்கு நினைவில் வந்துபோன பேச்சு இது:
https://www.youtube.com/watch?v=_7_XH1CBzGw

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)