190. பொன்னியின் செல்வன்

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. கடந்தகால மருந்துகளை மறந்து கொண்டே சமூகம் இருக்கும் வரை, கிருமிகளும் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படிப்பட்ட‌ தொற்றுநோய்க் காலங்களில் ஏதோவொரு பொருள் விற்றுத் தீர்ந்தும் விடுகிறது. மத்திய அரசின் புது வரியைப் பற்றி, ஒரு வரி சொன்னதற்காக, ஒரு நூறு நாட்கள் திரை கண்ட படத்தைப் போல! என் கணிப்பு சரியெனில், இப்போது விற்றுத் தீரப் போகிற பொருட்களில் ஒன்று இப்புத்தகம்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி
வெளியீடு: LKM பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 854
விலை: ரூபாய் 290
வாங்கிய இடம்: கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன் சென்னை ஸ்பென்ஸர் பிளாசாவில் நண்பன் சேரலாதன் வாங்கித் தந்தான்
————————————————————————————————————————————————————————————————————————————
பொன்னியின் செல்வன். எழுதப்பட்ட காலங்களில் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்ட புதினம். பெரும்பாலானோர் முதன்முதலில் படிக்கும் புதினம். இன்றும் எல்லா வயதினரும் திரும்பத் திரும்ப படிக்கும், மற்றும் நாடக வடிவில் கண்டு களிக்கும் ஒரு புதினம். நம்புங்கள், இத்தனை புத்தகங்கள் படிக்கும் நான், இப்புத்தகத்தைச் சென்ற வருடம் தான் படிக்க ஆரம்பித்து முடித்தேன். மொழி பற்றிய நிகழ்வுகளில் இப்புத்தகம் பற்றி சொல்லப்படும் தகவல்களும், மேற்கோள்களும் புரியாமல் திரிந்த காலங்கள் உண்டு. இப்புத்தகத்தின் ஒரு பாத்திரத்தைப் புனைப்பெயராக வைத்திருக்கும் முன்னாள் நண்பர் ஒருவர் கூட, எஸ்.ரா. போன்றவர்களைப் படிக்கும் எனக்கு இப்புத்தகம் தேவையில்லை என்று படிக்கப் பரிந்துரைக்கவில்லை! பதினைந்து ஆண்டுகள் தொடர் வாசிப்பிற்குப் பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு வேறேதும் படிக்க புத்தகம் இல்லாத நிலையை உருவாக்கி, இதைப் படித்து முடித்தேன். காலங் கடந்து படித்தாலும் வருத்தமில்லை. ஏனெனில் இது வயது வந்தவர்களுக்கான புத்தகம்!

ஐந்து பாகங்கள், காவிரியின் அத்தனை கிளையாறுகள், சென்னைக்குத் தண்ணீர் தரும் வீராணம், புத்தரின் பல்லைக் காத்து சொல்லைக் காக்காத இலங்கை, இயற்கையின் அழகான மற்றும் அலங்கோலமான கோடியக்கரை, வேதாரண்யம் என்று சம‌ஸ்கிருதமான திருமறைக்காடு, கோர்ட் பெரியாஸ்பத்ரி வழியாக உறையூர் என்று அரைத்த மாவையே மீண்டும் அரைக்காமல், புதிய துணிகளைத் துவைக்க முயல்கிறேன்.

1. சில படித்த அறிவாளிகள் சிலாகித்துப் பேசுவது போல் நினைத்து, இப்புதினத்தின் முடிவைப் படிக்காதவர்களுக்கும் சொல்லும் மேதமைத்தனத்தைக் கண்டிருக்கிறேன். இராசராசன் என்றொரு மன்னர் சோழ நாட்டை ஆண்டது மட்டும் தெரிந்தவராக இப்புத்தகம் படித்திராமல் நீங்கள் இருப்பின், அவர் மன்னராவதற்கு முன்னர் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன், கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்புதினத்தின் கதைக்களம். சோழ மன்னர்களின் பரம்பரை வரிசை உட்பட வேறு எதையும் அறிய முற்படாமல், ஒரு கன்னியை அணுகுவதுபோல் இப்புதினத்தைப் படிக்கத் தொடங்குங்கள்.

2. Midnight’s Children என்ற சல்மான் ருஷ்டியின் புதினம் திரைப்படமாக வந்தது. சென்னை எஸ்கேப் திரையரங்கில் பல முதியவர்களுக்கு இடையே ஒரேயொரு இளைஞனாக அப்படத்திற்குப் போனேன். அப்புதினம் முழுதும் பரவிக் கிடக்கும் மாய எதார்த்தம் என்ற சித்தாந்தத்தை எப்படித் திரைப்படுத்தி இருப்பார்கள் என்ற ஆர்வம்தான். திரைப்படம் தோற்றுப் போனது. பொன்னியின் செல்வன் கூட ஒரு காட்சிப் புதினம் தான். அதன் பிரம்மாண்டம் கருதி, பலர் முயன்றும் இன்னும் திரைக்கு வரவே இல்லை. இயக்குனர் மணிரத்னம் எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். அப்படி ஆனால், கண்டிப்பாக நான் பார்க்கப் போவதில்லை!

3. வயது வந்தவர்களுக்கான புத்தகம் என்று ஆரம்பத்தில் சொன்னதற்கு ஆபாசம் வன்முறை என்று அர்த்தமல்ல. தொடர்ந்து படித்தால், பல காரணங்கள் புரியும். ஆண்-பெண் உடலுறவை வலிய திணிக்கும் இந்தித் திரைப்படங்கள் போல் எழுதும் ஆசிரியர்களை நான் படிப்பதில்லை. பொன்னியின் செல்வனில் காதல் காட்சிகள் சில உண்டு. காமம் கிடையாது. இக்கதையை யாராவது திரைப்படமாக்கினால், குரவைக்கூத்து, ஏலேல சிங்கன் கூத்து போன்றவை நடக்கும் இடங்களில் ஆபாசப் பாடல்களை இட்டு நிரப்பும் வாய்ப்புகள் அதிகம்.

4. நான் தமிழ்வழியில் பள்ளிக்கூடங்களில் படித்ததால், இப்புதினத்தில் வரும் ‘கொண்டல்’ போன்ற அழகான வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடவில்லை. பள்ளிக்கூடத் தமிழ்ப்பாடத்தோடு தொடர்பற்று போன பல வார்த்தைகளை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி; அவற்றின் பொருள்கள் பெரும்பாலும் தெரிந்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி. நிமித்தக்காரன், ஆபத்துதவி, காலாமுகர், நானா தேசத்து திசையாயிரத்து ஐந்நூற்றுவர் போன்ற பல புதிய வார்த்தைகளை எதிர்கொள்ளலாம்.

5. சென்னை புத்தகக் கண்காட்சியில் காமிக்ஸ் வடிவில் படங்களுடன் குழந்தைகளுக்காக புதிய வடிவில் பொன்னியின் செல்வனைக் கண்டேன். முதலிரண்டு பக்கங்கள் தான் பார்த்தேன். ஆடி 18 அன்று எழுபத்து நான்கு கணவாய்களுடன் கடல் போல் ஆர்ப்பரிக்கும் வீராணம் ஏரியை விவரித்து ஆச்சரியப்படுத்தும் முதல் அத்தியாயத்தை விவரிக்க முடியாமல் காமிக்ஸ் தவிர்த்துவிட்டது! ஆழ்வார்க்கடியானை அறிமுகம் செய்து அவனைப் பற்றிய தோற்றத்தை வாசகனின் கற்பனைக்கு ஏற்ற பல வரிகளைப் பயன்படுத்தியிருப்பார் கல்கி. பூணூல் குடுமி வைத்து, தொப்பையுடன் ஓர் உருவத்தைக் காட்டிவிட்டு ஆழ்வார்க்கடியான் என்று அறிமுகப்படுத்தும் காமிக்ஸ்கள் உளவியல்படி ஆபத்தானவை! வங்கக்கடல் சுழிக்காற்றையும், கூரையை மிதக்க வைக்கும் காவிரி வெள்ளத்தையும் காமிஸ்கள் காட்டுமா? தயவுசெய்து அடுத்த தலைமுறையைப் படிக்கச் சொல்லுங்கள்; பார்க்கச் சொல்லாதீர்கள். பொன்னியின் செல்வன் ஒரு காட்சிப் புதினம்.

6. புதினத்தில் நான் மிகவும் ரசித்து படித்தபின் அசைபோட்ட வரிகளில் இதுவும் ஒன்று:
“ஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாகத் தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அல்ல; அநேக வாய்கள். அந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான். திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும்போது மறைந்தது.”
இது புரிய கபந்தன் யாரென்று தெரிய வேண்டும். அதற்கு இராமாயணம் தெரிய வேண்டும். அப்படியே தெரிந்து இருந்தாலும், ஆசிரியர் இவ்விடத்தில் சொல்ல வரும் காட்சியைக் கிரகிக்கத் தெரிய வேண்டும். திரும்பவும் சொல்கிறேன், பொன்னியின் செல்வன் ஒரு காட்சிப் புதினம்! காமிக்ஸ்களில் உணர முடியாது.

7. ஆழிப்பேரலை என்ற‌ வார்த்தை புழக்கத்தில் இல்லாத காலத்தில் எழுதப்பட்ட இப்புதினத்தில் சுனாமியும் உண்டு! சுந்தர சோழனின் பிரமையை ஆசிரியர் எப்படி உணர்ந்து எழுதினார் என்று தெரியவில்லை! நான் மூளை பற்றி சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். சுந்தர சோழனின் செயல்களைப் படிக்க படிக்க, மூளை பற்றி நான் படித்த பல விடயங்கள் நினைவில் வந்து போயின. இது வயது வந்தவர்களுக்கான புத்தகம்!

8. இப்புகைப்படங்களைப் பகிர இதுதான் சரியான இடம்: https://photos.app.goo.gl/YkKkCobkSrD1kmqb6

9. புதினத்தின் நான்காம் பாகத்தில், வெவ்வேறு இடங்களில் இருக்கும் மூன்று பேரை ஒரே நேரத்தில் கொல்ல சதி நடக்கும். அதில் முதலில் கொல்லப்படுவரைக் கொன்றவர் யாரென்ற புதிரை, நீண்ட வாசிப்பிற்குப் பிறகு புதினமும் சொல்லிவிடும். அக்கொலையில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றியும், அவர்களுக்குப் பிற்காலத்தில் மாமன்னர் என்ன தண்டனை கொடுத்தார் என்பதறிய நீங்கள் இன்னொரு புத்தகம் படிக்க வேண்டும். தற்காலத்தில் தமிழின் மிகச்சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ என்ற புத்தகம் அது. படித்துப் பாருங்கள். காஞ்சிபுரம் முதல் காட்டுமன்னார் கோவில் வரை சாதி நீளும்!

10. புதினத்தின் கதையில் ஓர் ஆபத்தான காலத்தில், மொத்தக் கதையும் நாகப்பட்டினத்தில் இருக்கும் ஓர் இடத்தை நோக்கியே பயணிக்கும். அவ்விடம் சூடாமணி விஹாரம். புதினம் படித்தவர்களுக்கு அவ்விடத்தின் பிரம்மாண்டம் தெரியும். சுவடில்லாமல் எங்கு போனது பௌத்தர்களின் அத்தங்கக்கோவில் பிரம்மாண்டம்? ‘நாட்டுக்குக் கோவிலைக் கட்டிட ஒருத்தர் திருடவும் செய்தாரு’ என்று தில்லுமுல்லு திரைப்படத்தில் முதல் பாடலில் இரண்டாம் சரணத்தில் இரண்டாம் வரியாக கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். சூடாமணி விஹாரத்தைச் சிதைத்து, அதன் தங்கத்தைத் திருடி, எதிர்த்தவர்களைக் காவிரியில் மூழ்கடித்து, நாட்டுக்குக் கட்டப்பட்ட கோவிலை நீங்களே தேடிப்போய் புண்ணியம் அடைவீர், பாபர் மசூதிக்கு நீதி சொல்லாத இந்நாட்டின் குடிமக்காள்!

11. சோழர்களின் பொற்கால ஆட்சியில் இறந்தும் இராசராசசோழன் புதைக்கப்பட்ட இடம் இன்றும் மர்மம். இன்றும் அரசியல்வாதிகள் நுழைய தயங்க வைக்கிறது அம்மாமன்னன் கட்டிய பெரிய கோவில். புதினத்தின் பெயரின் அர்த்தம் புரியவே 188 பக்கங்கள் படிக்கும் பொறுமை வேண்டும். பொறுமையுடன் படியுங்கள். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து இராசராசசோழன் என்றொரு திரைப்படம் வந்தது. தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம். அதையும் பாருங்கள். இப்புதினம் மற்றும் திரைப்படம் சொல்லும் விடயங்கள் இராசராசசோழன் பற்றி நமக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கும். ஏறக்குறைய ‘எனது போராட்டம்’ என்ற ஜெர்மானியப் புத்தகம் அதன் ஆசிரியரைப் பற்றி உருவாக்கும் பிம்பம் போன்றது அது. பொற்கால ஆட்சியென தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாமல் இருக்கும் இராசராசசோழன் பற்றி படித்தறிய இன்னும் நிறைய இருக்கின்றன. அப்பேரர‌சனின் ஆட்சியைச் சமூக நோக்கில் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்த புத்தகங்களும் உண்டு. நானும் அப்படிப்பட்ட ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். நீங்களும் தேடிப் போய் படியுங்கள். அதன்பிறகு கருத்து சொல்லுங்கள் பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு!

மேட்டூர் அணை கட்டப்பட்ட பின் ஜீன் 12 அன்று சோழ நாட்டிற்குக் காவிரி வராத 70வது ஆண்டு இந்த 2019! பா.ரஞ்சித்தா அல்லது காவிரியா? உங்கள் கையில் தமிழகம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)