191. AN UNCERTAIN GLORY : INDIA AND ITS CONTRADICTIONS

(ஜெயலலிதா கொல்லப்படுவதற்கு முன், தனது ஆட்சியில் தமிழக சட்டசபையில் மேற்கோள் காட்டி பேசிய புத்தகம் இது)

உன் வீட்டு லெட்சணத்தைப் பக்கத்து ஊரில் போய் கேட்டுப் பார்.
– யாரோ

மனைவியின் வேசித்தனம் கணவனுக்குத் தான் கடைசியாகத் தெரியும்.
– யாராரோ
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: AN UNCERTAIN GLORY : INDIA AND ITS CONTRADICTIONS
ஆசிரியர்: Amartya Sen, Jean Drèze
வெளியீடு: Penguin Books
முதல் ஈடு: 2013
பக்கங்கள்: 434
விலை: நினைவில்லை
வாங்கிய இடம்: அமேசானில் ஒரு மலையாள நண்பன் வாங்கிக் கொடுத்தான்
————————————————————————————————————————————————————————————————————————————
நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும். GDP அது இதுவென்று என்னைப் போன்ற சாமானியர்களுக்குச் சற்று கடினமான புத்தகம் இது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகராதி தேவைப்பட்ட புத்தகமும் கூட. இந்தியாவின் வளர்ச்சியைத் தெற்காசிய மற்றும் கொஞ்சம் முன்னேறிய‌ ஆப்பிரிக்க‌ நாடுகளுடன் ஒப்பிட்டும், அதே ஒப்பீட்டை இந்திய மாநிலங்களுக்குள் செய்தும், உண்மையில் நமக்கெல்லாம் சொல்லப்படும் வளர்ச்சி, உண்மையிலேயே வளர்ச்சிதானா என புள்ளிவிவரங்கள் மூலம் சொல்வதே இப்புத்தகம்.

GDP, தனிமனித வருமானம், பிரசவகால மரணங்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை, சுகாதாரத் திட்டங்களின் பரவல், படிப்பறிவு வீதம், ஊட்டச்சத்தற்ற குழந்தைகள் என பல காரணிகளைக் கொண்டு ஒப்பிடுகிறார்கள். சகாரா பாலைவனத்தை ஒட்டிய ஏழை நாடுகளைத் தவிர்த்து, மற்ற ஏழை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் நிலை அவ்வளவாகச் சிறப்பாக இல்லை. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா பின்னோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது. அவற்றில் குறிப்பாக இந்தியா விடுதலையாக்கிக் கொடுத்த பங்களாதேசம், எந்தவொரு கோணத்திலும் வளர்ச்சி என்பதற்கு உதாரணமாக இல்லாத பங்காளதேசம், இந்தியாவின் குறைகள் பெரும்பாலனவற்றைத் தன்னோடும் கொண்டிருக்கும் பங்காளதேசம், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் இந்தியாவைவிட வேகமாக முன்னேறி வருவதைக் குறிப்பிடுகிறார்கள். அதற்குக் காரணமாக, பெண்களை அதிக அளவில் சமூகத் திட்டங்களை ஈடுபட வைப்பதே என்றும் சொல்கிறார்கள். பங்காளதேசப் பெண்களின் மூலம் ஒருவர் நோபல் பரிசே வாங்கினார் இல்லையா!

BRIC நாடுகளுடன் அடுத்து ஒப்பிடுகிறார்கள். பிரேசில் ரஷ்யா சீனா. 2010ல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து BRICS ஆனது. நாடுகளின் பெயர்களைப் படிக்கும் போதே தெரியும், இந்தியா தேறாது என்று. இனிமேல் வரும் கட்டுரைகள் தான் முக்கியம். இந்திய மாநிலங்களை ஒப்பிடுதல். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டையும் கேரளாவையும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டாதீர்கள். அவைகளை ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும். நன்றாய் இருக்கும் இவ்விரு மாநிலங்களையும், படு மோசமாய் இருக்கும் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து சராசரி எடுக்கும்போது, இந்தியாவின் நிலைமையும் மோசமாகத் தெரிகிறது. இமாச்சலப் பிரதேசம் தவிர, ஹிந்தி பேசும் வட மாநிலங்கள் தேறவேயில்லை. இப்படித்தான் புத்தகத்தின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டை மட்டும் தனியாக எடுத்து, மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட்டு, சுகாதார மற்றும் சமூக நலத்திட்டங்களில் மிகச் சிறப்பாக முன்னேறி இருப்பதைப் பத்து பக்கங்களுக்கு மேல் விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டைத் தாய்லாந்து, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழ்நாட்டைப் பின்பற்றுமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

அளவுகோலை வைத்து ஒரு பென்சிலின் நீளத்தைக் கூட அளக்கத் தெரியாத, நான்கு காந்திகளில் யார் இப்போது உயிரோடு இருக்கிறார்க‌ள் என்று சொல்லத் தெரியாத மாணவர்களைத் தான் பெரும்பாலான இந்தியப் பள்ளிக்கூடங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதாக கல்வித்தரத்தை வருத்தத்துடன் சொல்கிறார்கள் ஆசிரியர்கள். அமர்தியா சென் யாரென்றே தெரியாமல், ஒரு கிரிக்கெட்காரனின் மனைவியுடன் இன்னொரு கிரிக்கெட்காரன் தொடர்பு வைத்திருப்பதைப் பெயர்களுடன் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன். இந்தியச் சமூகத்தில் சாதி என்ற பெயரில் இருக்கும் எற்றத்தாழ்வுகளைப் பற்றி ஒரு கட்டுரை. அலகாபாத் என்ற ஒரு நகரத்தை மட்டும் உதாரணமாக எடுத்து, நீதிமன்றம் ஊடகம் மருத்துவம் பல்கலைக்கழகம் என்று பல துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் எண்ணிக்கையை ஒரு பட்டியலாகக் காட்டுகிறார்கள். உயர்சாதிக்காரர்கள் குறிப்பாக பிராமணர்கள் அடேயப்பா!!! தற்போது அந்த அலகாபாத் பெயரையே மாற்றிவிட்டார்கள் அவர்கள். “உயர்சாதி, பொருட்செல்வம், ஆங்கில அறிவு இவற்றில் ஏதெனும் இரண்டு இருப்பவர்களுக்கு ஆளும் வர்க்கத்தின் எல்லா வசதிகளும் கிடைக்கின்றன” என்றார் இராம்மனோகர் லோகியா. ஜனநாயக முறை போல் காட்டிக் கொண்டு, இந்த மூன்றையும் கொண்டவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுக்க கொண்டுவரப்பட்டதுதான் நீட்தேர்வு!

எனக்குப் புரியாத, அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத இன்னும் பல விடயங்களைப் புள்ளிவிவரங்களுடன் சொல்கிறது புத்தகம். தமிழ்நாடு பற்றி கட்டுரைகளில், நாம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பல படிகள் முன்னேறி இருப்பதற்கான சில காரணங்களையும் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அவற்றில் சில:
புதுமையான சிந்தனைகளுடன் மக்களுக்குத் தரப்பட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்கள். பள்ளிகளில் மதியவுணவுத் திட்டம். அதில் முட்டை. உழவர் சந்தை. அம்மா உணவகம். இன்றும் இயங்கும் ரேஷன் கடைகள். இப்படி பல திட்டங்களைத் தமிழ்நாடுதான் இந்தியாவிற்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இன்று தெர்மோகோல்! முட்டை அசைவம் என்று மத்திய பிரதேசக் காவி அரசு அதையும் நீக்கிவிட்டது. மதியவுணவைச் சமைப்பவர்களின் சாதியைப் புகுத்துகிற கொடிய ஊர்கள் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. மதியவுணவிற்குப் பதில் பிஸ்கெட்டுகள் கொடுக்கும் திட்டம் ஒன்று நீண்ட காலம் மத்திய அரசு விவாதத்தில் இருப்பதாக இப்புத்தகத்தில் தான் படித்தேன்.
என்னதான் சபரிமலை சாமிகள் இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெண்சிசுக்கொலை தமிழ்நாட்டில் குறைவு. பெண்களுக்குத் தரப்படும் சமூக அந்தஸ்து கொஞ்சம் அதிகம். உதாரணமாக, பால்வாடி எனப்படும் அங்கன்வாடி திட்டம் முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்படுகிறது.
இதனை இதனால் இவள்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவள்கண் விடல் !

இவற்றைத் தவிர தமிழ்நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு அடித்தளமாக ஆசிரியர்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள். பெரும்பாலான படித்த தமிழர்கள் உணர்ந்த காரணம்தான். மத்தியிலும் மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஆட்சிகள் நடக்கும் இக்காலத்தில் நாம் கொஞ்சம் தேங்கிப் போய் கிடந்தாலும், நம்மை இந்நிலைக்கேனும் உயர்த்திவிட நம் முன்னோர்கள் நமக்குச் செய்து போன அந்த அடித்தளத்தை இதுபோன்ற புத்தகங்கள் மூலம் மீண்டும் நினைவுபடுத்தி சுதாரித்துக் கொள்வோம்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)