192. மதுரை அரசியல்

தமிழைக் குடித்த கடலோடு – நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை – இது
மரபுகள் மாறா வேல்மதுரை!

தென்னவன் நீதி பிழைத்ததனால் – அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!
– வைரமுத்து
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: மதுரை அரசியல்
ஆசிரியர்: ப. திருமலை
வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
முதல் ஈடு: மார்ச் 2016
பக்கங்கள்: 336
விலை: 250
வாங்கிய இடம்: சென்னை புத்தகத் திருவிழா 2019
————————————————————————————————————————————————————————————————————————————
மதுரை அரசியலைப் பல ஆளுமைகள் மற்றும் சம்பவங்கள் மூலம் 35 கட்டுரைகளில் சொல்கிறது இப்புத்தகம். ராணி மங்கம்மாள் முதல் விஜயகாந்த் வரை. தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தது முதல் காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது வரை. அண்மையில் தாய்லாந்து சுற்றுப்பயணம் தனியாகச் சென்றபோது, படிப்பதற்காக இப்புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என நினைத்தேன். லீலாவதி மற்றும் தா.கிருட்டிணன் கொலைகள், தினகரன் அலுவலகம் எரிப்பு போன்ற புகைப்படங்கள் இருப்பதால், மொழி தெரியாத நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை. இடையில் சில கட்டுரைகள் கம்யூனிஸ்ட் புத்தகம் போன்ற சாயலைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்தமாக நல்ல புத்தகம். பெருங்காமநல்லூர் கலவரம் போன்ற‌ நிறைய தகவல்கள் புதிதாகத் தெரிந்து கொண்டேன்.

புத்தகத்தின் பெரிய குறை அதன் நீளம். நிறைய தேவையில்லாத கருத்துக்கள். லீலாவதி தினமும் 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதினார் சரி, சோனியா காந்தியின் உரையைத் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ் யார் மொழிபெயர்த்தால் வாசகனுக்கு என்ன? அதற்கு ஒரு பத்தி தேவையா? கருணாநிதியின் டெசோ மாநாட்டிற்கும் எம்ஜிஆரின் ரசிகர் மன்ற மாநாட்டிற்கும் யார் பந்தல் போட்டார்கள் போன்றவற்றை ஒரு சாதாரண வாசகன் ஏன் படிக்க வேண்டும்? சில தகவல்கள், கடுப்பேத்துறார் மைலார்ட் வகை. உதாரணமாக,
‘கலைஞரின் சூடான வயதில் சூல் கொண்ட அழகிரியே’
‘நான் சுப்பிரமணியன் சுவாமி ஐயர் அல்ல சுப்பிரமணியசுவாமி தேவர்’
‘கலைஞரின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா?’
‘கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது, காங்கிரஸ் ஆட்சிக்கு வராது’

இப்புத்தகத்திற்காக ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதைப் படிக்கும் போது நன்கு உணரலாம். மிக நுணுக்கமான பல விடயங்களைச் சேகரித்து எழுதி இருக்கிறார். நீரை விட்டுவிட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னப்பறவை போல், நீங்களும் கண்டிப்பாக படிக்கலாம்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)