193. கெத்து

எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் கிடையாது. சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பார்ப்பேன். அதிலும் சில குறிப்பான நிகழ்ச்சிகள் மட்டும். நாளைய இயக்குனர் அவற்றில் ஒன்று. அண்மையில் ‘பேசாத பேச்செல்லாம்’ என்றொரு குறும்படம் பார்த்தேன். https://www.youtube.com/watch?v=MaMfO9T_T6Y. நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் என்னைப் பாதித்த ஒரு குறும்படம். பெண்ணின் உள்ளாடையைப் பற்றிப் பேசியும் அவளைத் தோலுரித்துக் காட்டாத ஒரு கண்ணியமான படைப்பு! சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அக்குறும்படத்தின் மூலக்கதையின் ஆசிரியரை இணையத்தில் தேடினேன். இலட்சுமணப் பெருமாள். தமிழின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றான ‘பூ’வில் தங்கராசின் பணக்கார மாமனாராக நடித்திருப்பார்.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: கெத்து (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: இலட்சுமணப் பெருமாள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் ஈடு: ஆகஸ்ட் 2018
பக்கங்கள்: 96
விலை: ரூபாய் 80
வாங்கிய இடம்: சென்னை புத்தகத் திருவிழா 2019
————————————————————————————————————————————————————————————————————————————
சிறுகதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருப்பவர் ச.தமிழ்ச்செல்வன். ஏற்கனவே இத்தளத்தில் எழுதப்பட்ட 176வது புத்தகத்திலும் அதே பணியை அவர் செவ்வனே செய்திருப்பதால், ஆசிரியர் யாரென்று தெரியாமலேயே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மொத்தம் 9 கதைகள். எல்லாம் கிராமப் பின்னணி. கிருஷ்ணப்பருந்து, துடி, சாகஸம், வயனம், மாலை பூத்த வேளை போன்ற கதைகள் அருமை. கடவுளையே கண்டுகொள்ளாத நான், இப்புத்தகத்தில் கடைசியாக‌ இருக்கும் ஓர் எளிய ஆன்மீகக் கதையில் பிரம்மித்துப் போனேன். தமிழ்ச் சிறுகதையுலகம் என்னையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்த இரண்டாவது கடவுள் கதையிது. குறும்படம் என்ற பெயரில் குப்பைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும் தமிழுலகம், துடி போன்ற கதைகளைத் தயவுசெய்து திரையில் கொண்டுவரட்டும். மற்றபடி, இலட்சுமணப் பெருமாள் என்பவர் யாரென்று தெரியாமல் கடந்து போகாதபடி தடுப்பதாக இப்பதிவு அமையட்டும்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)