241. ஞானக்கூத்தன் கவிதைகள்

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்
தலைக்கொன்றாகச்
செங்கல்லில் கோயிலுண்டு
விழாக் கொண்டாடும்
திருமடங்கள் எட்டுண்டு
உன்னை என்னை
வாய்பொத்தச் செய்கின்ற
பேரான்மாக்கள் இல்லங்கள்
சில உண்டு
கடைகள் உண்டு
ஆறுண்டு திருக்குளமும்
பிறவும் உண்டு
மலங்கழிக்க நான் போகும்
வழியின் ஊடே

ஊர்புகழும் மார்கழியை
ஏன் டிஸம்பர்
கைவிட்டுப் போகிறது

அறியாமையின் எல்லை
இங்குதான் முடிகிறதென்று
பலகையில் ஒரு கந்தர்வன்
எழுதிக் கொண்டிருந்தான்
அதை எங்கே வைக்கப் போகிறான் என்பது
அவனே அறியமாட்டான்

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை

—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
ஆசிரியர்: ஞானக்கூத்தன்
வெளியீடு: காலச்சுவடு
முதல் ஈடு: நவம்பர் 2018
பக்கங்கள்: 823
விலை: ரூபாய் 895
வாங்கிய இடம்: 2022 வருட புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி
—————————————————————————————————————————————————————————————————————————
நான் வாங்கிப் படித்த பல கவிதைப் புத்தகங்கள் கொஞ்சமும் பிடிக்கவில்லை என நண்பன் சேரலாதனிடம் புலம்பினேன். கவிதைகள் மேல் ஒவ்வாமை வரும் அளவிற்குப் புரியவேயில்லை என்றேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ளும் வயதைத் தாண்டிவிட்டோம் என்றான். புதுகை புத்தகக் கண்காட்சியில் கவிதைகளை வெறிகொண்டு தேடினேன். ஞானக்கூத்தன் கண்ணில்பட்டார். தடிமனையும் விலையையும் பார்த்துவிட்டு, உரையிடப்பட்ட அக்கவிதைத் தொகுப்பை நான் வாங்குவேனா என்ற சந்தேகத்தில், கடைக்காரர் தள்ளுபடி உண்டென்றார். எனது தாகம் பாலைவனத்தாகம். வாங்கிவந்து கொஞ்சம் கொஞ்சமாக ஐந்து மாதங்களாகப் படித்தேன். அறுநூறுக்கு மேற்பட்ட கவிதைகள். மொத்தம் 16 கவிதைகளைப் பிடித்ததாகக் குறித்து வைத்திருக்கிறேன். கவிதைகள் புரியும் அளவிற்கு வயதாகவில்லை என்பதில் மகிழ்ச்சி!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)