243. ஆதிப்பழி

வியட்நாம் நாட்டைத் தனியாக சுற்ற முடிவானபிறகு, கேள்விப்பட்டிராத ஒரு புத்தகத்தைப் பயணத்தில் படிக்க வேண்டுமென முடிவெடுத்து, புத்தகக் கடையில் நீண்ட தேடுதலுக்குப் பின் முடிவான புத்தகம் இது. ‘பூ’ திரைப்படத்தில் தங்கராசின் பணக்கார மாமனாராக நடித்திருப்பவர்தான், இப்புத்தகத்தின் ஆசிரியர். மொத்தம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. 8 கதைகளைப் பிடித்த கதைகளாகக் குறித்து வைத்திருக்கிறேன். பாதி மற்றும் பாதிக்கு மேற்பட்ட கதைகளைப் பிடித்திருப்பது, எனக்கு இது முதல் புத்தகம் என நினைக்கிறேன்.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: ஆதிப்பழி
ஆசிரியர்: எஸ்.இலட்சுமணப்பெருமாள்
வெளியீடு: நூல் வனம்
முதல் ஈடு: சூன் 2016
பக்கங்கள்: 232
விலை: ரூபாய் 200
வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)
—————————————————————————————————————————————————————————————————————————
மகாகவியே பெயர்வைத்த அக்பர் என்ற யானையை மையமாக வைத்து, மகாகவி மற்றும் அவரின் தந்தையின் கதைகளை ஒன்றாகச் சொல்லும் ஒருசிறுகதை, இத்தொகுப்பின் சிறந்த கதையென்பேன். நன்கு தெரிந்த மகாபாரதக் கிளைக்கதை ஒன்றைச் சலிப்பில்லாத மொழிநடையில் சொல்கிறது ஒரு சிறுகதை. இவ்விரு கதைகளைத் தவிர, மற்ற கதைகள் எல்லாம் கிராமத்து மொழிநடையில் நக்கல் நையாண்டி பகடி கதைகள். சில இடங்களில் தனியாக படித்துக் கொண்டிருக்கும்போது சிரித்திருக்கிறேன். மிக நல்லதொரு சிறுகதை தொகுப்பு. கண்டிப்பாகப் படியுங்கள்.

அப்பறம் ஓர் அனுபந்தம். வியட்நாமிற்கு இப்புத்தகத்தை எடுத்துச் செல்ல பையில் இடமில்லாமல், இன்னொரு புத்தகம் மட்டும் எடுத்துப் போனேன். நானொன்று நினைக்க, சனியன் பிடித்த தெய்வம் ஒன்று நினைக்கிறது.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)