178. மதரஸாபட்டினம்

எனக்கு விவரம் தெரிந்த வயதில் மெட்ராஸ் என இருந்தது. பின் சென்னை என ஆக்கினார்கள். அம்மாநகரின் வரலாற்றைப் படித்தபோது, பெயர்க்காரணங்கள் புரிந்தது. ஏனோ சென்னை என்பது எனக்கு நியாயமாகப் படவில்லை. அம்மாநகரை உருவாக்கிவிட்டு இன்று ஓரமாக வாழும் நம்மூர் உழைக்கும் மக்களின் ஒருபகுதியைத் திரைப்படத்தில் கொண்டுவந்தபோது, பா.ரஞ்சித் அவர்கள் மெட்ராஸ் என பெயரிட்டது எனக்கும் மிகச் சரியெனவேபட்டது. அவர்களுடன் ஆங்கிலேயர்கள் யூதர்கள் போர்த்துக்கீசியர்கள் ஆர்மேனியர்கள் பிரெஞ்சுக்காரர்கள் பார்சிகள் என மெட்ராஸைக் கட்டமைத்தவர்கள் பலர். அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் புத்தகம் இது.
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: மதரஸாபட்டினம்
ஆசிரியர்: தாழை மதியவன்
வெளியீடு: இலக்கியச்சோலை
முதல் ஈடு: மே 2016
பக்கங்கள்: 176
விலை: ரூபாய் 100
வாங்கிய இடம்: சென்னை புத்தகக் கண்காட்சி 2017
————————————————————————————————————————————————————————————————————————————
மெட்ராஸ் மாநகருடன் தொடர்புடைய இஸ்லாமிய ஆளுமைகளையும் இடங்களையும் சொல்கிறது இப்புத்தகம். காந்தி நேரு வரலாறுகளே திரிக்கப்படும் இக்காலத்தில், ஒரு சமூகத்தின் உண்மைச் சரித்திரத்தைப் பதிந்து வைக்கும் முயற்சி இது. மதரஸாபட்டினம் என்பதை மதராஸபட்டினம் என சொல்வதே இஸ்லாமியர்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் முயற்சி என்று ஆரம்பப் பக்கங்களிலேயே அதிர்ச்சி தருகிறார் ஆசிரியர். நான் மெட்ராஸ் நகருக்கு ஒருமுறை இரயிலில் சென்று கொண்டிருந்தபோது, சகபயணிகளில் ஒருவர் சொன்னார்: ‘அரசு கட்டிடங்களில் ரிப்பன் பில்டிங் போன்ற வெள்ளைநிற கட்டிடங்கள் எல்லாம், வெள்ளைக்காரன் கட்டியவை. சென்ட்ரல் போன்ற சிவப்புநிற கட்டிடங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் கட்டியவை’. மெட்ராஸில் வாழ்ந்த நாட்களில் இக்கூற்றில் நான் தவறேதும் காணவில்லை.

ஆற்காடு நவாப் வழங்கிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தெப்பக்குளம். கோல்கொண்டா சுல்தானின் அரசு அலுவலகங்கள் இருந்த கச்சேரித் தெரு. செத்தும் கொடுத்த சீதக்காதி பயன்படுத்திய பண்டகசாலைதான் இன்றைய தலைமை அஞ்சலகம் (சாரதாஸ் பக்கத்தில் இருக்கிறதே அதுவா?). சைதாப்பேட்டை ஆன சையதுகான் பேட்டை. ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் ஆயிரம் விளக்கு. காசிச்செட்டி தெரு. ஹைதர் அலியின் ஆயுதப் பட்டறை இருந்த ஹைதர் பட்டறைத் தெரு. ஆற்காடு நவாப் இருந்த சேப்பாக்கம் அரண்மனை. இராயப்பேட்டை அமீர் மகால். தி நகரில் உள்ள ஹபிபுல்லா தெரு. முஸ்லீம்கள் என்ற பொருள் கொண்ட மூர் மார்க்கெட். இப்படி இப்புத்தகத்தில் பட்டியல் நீளுகிறது.

19ம் நூற்றாண்டில் இறுதியில் சென்னை சென்ட்ரலுக்கு அருகில் இருந்த ஒரு விடுதியில் ‘நாய்களுக்கும் பாய்களுக்கும் இங்கு இடமில்லை’ என்று எழுதி இருந்தார்களாம். நவாப் சி.அப்துல் ஹக்கீம் இந்து முஸ்லீம் பள்ளி என்று இருமதங்களின் பெயர் கொண்ட பள்ளி ஒன்றும் சென்னையில் உள்ளதாம். இவ்விரண்டு தகவல்களையும் இப்புத்தகத்தில் தான் படித்தேன். பெரும்பாலும் முதல் தகவலை நோக்கி நாம் நகர்த்தப்படும் இக்காலத்தில், இரண்டாம் தகவல்தான் நமக்குத் தேவை என்பதையே இதுபோன்ற புத்தகங்களைப் படிக்கும் போது உணர்கிறேன். அடுத்த வாரம் சென்னையின் பிறந்தநாளை ஊடகங்கள் விமரிசையாகக் கொண்டாடும். கொஞ்சம் இந்த மெட்ராஸையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)