194. The Autumn of the Patriarch

இவ்வளவு கடினப்பட்டு வேறெந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை. இதைப் படிக்க தற்போதைய அறிவு போதாதென்று தாழ்வுணர்ச்சி தென்பட, இரண்டு முறை பாதியிலேயே வேறெந்த புத்தகத்தையும் நிறுத்தி வைத்ததில்லை. இதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்கால மனிதர்கள் சிலர் மேல் எப்போதும் பொருத்திப் பார்த்து பார்த்து, அவர்கள் மேல் மனதிற்குள் ஒரு பிம்பம் தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து, சிறிது இடைவெளி விட்டு விட்டு வேறெந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை. இதுபோல் இன்னொரு புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. இப்படியொரு புதினம் தமிழில் இல்லையே என்ற குறையை வருங்காலத்தில் நானே தீர்த்துவைக்க வேண்டும் என்ற நினைவு நிறைவேறுமா என்றும் தெரியவில்லை!
————————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The Autumn of the Patriarch
ஆசிரியர்: Gabriel García Márquez
ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலப்படுத்தியவர்: Gregory Rabassa
முதல் ஈடு: 1975
பக்கங்கள்: 229
விலை: ரூபாய் 299
வாங்கிய இடம்: முன்னொரு காலத்தில் ஆதலால் நினைவில்லை
————————————————————————————————————————————————————————————————————————————
அண்மையில் எனது புத்தக அலமாரிகளைச் சுத்தம் செய்து, வரிசைப்படுத்தும் போது கவனித்தேன். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் அவர்களின் புத்தகங்கள் தான் அதிகமாக வாங்கிப் படித்திருக்கிறேன். மார்க்வெஸ் என்ற அதிவுன்னத கதைசொல்லியின் ஏறக்குறைய அனைத்துப் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். The Autumn of the Patriarch. இதை எப்படி தமிழாக்குவது? ஒரு முதல்வனின் அந்திமக்காலம்! எப்போது வாங்கினேன் என்று தெரியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பே, இப்புத்தகத்தின் ஒரு வரியை எனது கவிதை ஒன்றிற்கு மேற்கோள் காட்டி இருப்பதால், அதற்கு முன்னே வாங்கிவிட்டேன். முதல்முறை படித்தபோது, சில பக்கங்களிலேயே தெரிந்துவிட்டது. அதுவரை நான் படித்திருந்த மற்ற புதினங்களைப் போல், இது இல்லை என்று. ஐம்பது பக்கங்கள் தாண்டி, இரண்டாம் அத்தியாய‌த்தைப் படிக்கத் தொடங்கும் போதுதான், ஏதோ மிகப்பெரிய தவறான புரிதலுடன் இதுவரை படித்துவிட்டது போல் ஒரு சிந்தனை தோன்ற அப்படியே மூடி வைத்துவிட்டேன். சில மாதங்களுக்குப் பின் மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தால், மீண்டும் அதே இடத்தில் விபத்து. என்னால் புரிந்து கொள்ளவே முடியாத புதினம் என்று முடிவு செய்து, புத்தக அலமாரியில் வைத்துவிட்டேன்.

என் நாட்டிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் செய்யும் சர்வாதிகாரக் கொடுமைகளைக் காணச் சகிக்காமல், என்னவானாலும் பரவாயில்லை என்ற வெறியுடன், மூன்றாம் முறை இப்புத்தகத்தைச் சென்ற வருடக் கடைசியில் படிக்க ஆரம்பித்தேன். இந்த வருட நாடாளுமன்றத் தேர்தலுக்கு மறுநாள், ஒன்பது நாட்கள் தாய்லாந்து சுற்றுப்பயணம் தனியாகச் செல்லத் திட்டமிட்டு இருந்தேன். இப்புத்தகத்தின் நினைவுகள் எதுவும், முடியாட்சி நடக்கும் தாய்லாந்தின் அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சிந்தனை வரக்கூடாது என முன்னெச்சரிக்கையாக, ஒரு மாதத்திற்கு முன்னரே இப்புத்தகத்தை நிறுத்தி வைத்தேன். பிறகு, சென்ற மாதம் தான் படித்து முடித்தேன், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்!

வழக்கம் போல் மார்க்வெஸின் ஒரு மாய எதார்த்த உலகப் புதினம் இது. பெயரற்ற ஒரு தேசம். ஒரு சர்வாதிகாரி. அவனின் இரண்டாவது மரணத்துடன் ஆரம்பிக்கும் புதினம், அவனின் இரண்டாம் மரணத்துடன் முடிகிறது. ‘இரண்டாம் மரணமா?’ என்று நீங்கள் வியந்தால், மார்க்வெஸின் எழுத்து உங்களுக்குப் புதியது என்று அர்த்தம். இரண்டாம் மரணம் என்று சொன்னதற்காக, இது ‘ரமணா’ திரைப்படம் போன்ற கதை இல்லை. சர்வாதிகாரின் முழு வாழ்க்கை வரலாறும் இல்லை. அந்திமக்காலம் என்று தலைப்பில் இருப்பதால், அந்தச் சர்வாதிகாரியின் கடைசிக் காலங்களைப் பற்றி பேசினாலும், செய்த கொடுமைகளுக்காக வருந்தும் நம்மூர் வகைக் கதையும் இல்லை. அப்படி என்னதான் கதை என்றால், கதையே இல்லை என்பதே உண்மை. அதற்குள் செல்வதற்கு முன், புதினத்தில் வரும் சில வரிகள். அவை உங்களுக்கு நமது ஆட்சியாளர்களை நினைவூட்டினால், நீங்களும் நானும் தோழர்களே!

there were orders that can be given but which cannot be carried out

everyday in the newspapers of the regime we saw his fictionalized photographs

the only thing that really interested him which was to discover some masterful hair-restorer for his incipient boldness

(his picture) both sides of all coins, on postage stamps, on condom lables

we had seen a cow on the balcony of the nation, what a shitty country

repeated harangues on the radio (மான் கி பாத்)

such a time as was necessary for the establishment of order and economic balance of the nation (நம் பணத்தை நாம் எடுக்க ஏடிஎம் வாசல்களில் காத்துக் கிடந்த நாட்களில் அடிக்கடி ஆண்ட வர்க்கத்தால் சொல்லப்பட்ட வாசகம்)

awaiting the miracle of official charity (பொருளாதாரத்தால் நலிந்த உயர்சாதியினருக்குப் 10% ஒதுக்கீடு. இராமர் கோவில் இந்தமுறை கண்டிப்பாக…)

corrector of earthquakes, eclipses, leap years and other errors of God (இரயில்வே பட்ஜெட் கிடையாது. ஐந்தாண்டு திட்டங்கள் கிடையாது. கிறிஸ்மஸ் விடுமுறை கிடையாது. ஒகி புயல் ஒழிந்து போனது, குஜராத்திற்கு வராமல்)

there would be always be a hidden intention in the proposals of a prime minister when he released the dazzling display of truth in the routine Wednesday report (தற்போது நடப்பது இராமராச்சியம் என்ற பரப்புரை. எனக்குத் தெரிந்து அதில் நடந்த ஒரே நிகழ்ச்சி சம்பூகன் கொலை மட்டும்தான்)

a lie is more comfortable than doubt, more useful than love, more lasting than truth (பசு புனிதம். இந்தியா இந்தியால் நிரம்பியது. ராகுல்காந்தி வேஸ்ட்டு. தீவிரவாதிகள் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவுகிறார்கள். உங்களிடம் எத்தனை புள்ளிவிவரங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இதெல்லாம் உண்மையில்லை என்று மட்டும் பேசிப் பாருங்கள்!)

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்; ஓர் அரசன் நின்று சாகும் கதை இது! அந்தச் சர்வாதிகாரிதான் மையக் கதாப்பாத்திரம். தாய், காதலி, மனைவி, ஒரு குழந்தை, தளபதிகள் என்று அவனைச் சுற்றி சில முக்கிய கதாப்பாத்திரங்கள். இந்த முக்கிய கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றாக மையக் கதாப்பாத்திரத்தை விட்டு நீக்கப்படுவதும், சர்வாதிகாரி கடைசியில் தனிமையில் தவிப்பதும் தான் கதைச்சுருக்கம்.  இது சொல்லப்பட்ட முறையில் தான் இப்புதினம் தனித்து நிற்கிறது. உதாரணமாக, புதினத்தைத் திறந்து கடைசியில் இருந்து மூன்றாம் பக்கத்தை நீங்கள் படிக்க ஆரம்பித்தால், சர்வாதிகாரியை யாரோ பெயர் சொல்லி அழைப்பார்கள். மொத்த புதினத்திலும் இந்த ஓரிடத்தில் தான் அவனை இன்னொருவர் பெயர் சொல்லி அழைப்பதாக இருக்கும் என என்னைப் போல படித்தவர்கள் குழம்பிப் போகும் இடம் இது. உங்களுக்குச் சர்வாதிகாரியின் பெயர் தெரியாது என்பதால், தொடர்ந்து படிப்பீர்கள்; அடுத்த சில வரிகளிலேயே சர்வாதிகாரி சொல்வார், அது தன் பெயரில்லை என்று. மொத்த புதினத்தில், ஒரேயொரு இடத்தில் தனக்குத் தானே சர்வாதிகாரி கடிதம் எழுதுவது போல் ஒரு பகுதி வரும். அந்த ஓரிடத்தில் மட்டும்தான் கதாநாயகனின் பெயரே வரும்!

சமஸ்கிருதத்தையும் யோகாவையும் உலகெலாம் கொண்டு செல்ல நமது அரசுகள் பாடாய்ப்படுவது போல், தாய்க்குப் புனிதர் பட்டம் கிடைக்க கத்தோலிக்கத் திருச்சபையின் போப்புடன் மோதுகிறார். உள்துறை அமைச்சருக்காக குஜராத் உளவுத்துறை ரகசியமாக ஓர் இளம்பெண்ணைத் தொடர்ந்தது போல, காதலியைத் தொடர்கிறார். ஒரு தளபதியின் தலையை வெட்டி மற்ற தளபதிகளுக்கு உணவாகப் பரிமாறும் பகுதி மட்டும், நிகழ்கால ஆட்சியாளர்களை அல்லாமல் அவுரங்கசீப்பை ஞாபகப்படுத்தியது. காமம் நிரம்பி வழியும் ஆசிரியரின் இன்னொரு புத்தகத்தைப் பற்றி இதே தளத்தில் எழுதி இருக்கிறேன். இப்புதினத்தில் இரண்டு மூன்று பக்கங்களுக்கு மட்டுமே சில படுக்கையறைக் காட்சிகள் வரும். மிகக் கொடுமையான மறக்க முடியாத அப்பக்கங்களைத் தன் மொழித்திறமை மூலம் ஆசிரியர் எளிதாகக் கடக்க வைக்கிறார். சர்வாதிகாரி 107க்கும் 232க்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு வயதில் வாழ்ந்து மரித்துப் போகிறார். மொத்தப் புதினத்தில் ஒரேயொரு கொலை செய்கிறார். வழக்கம்போல் ஆசிரியரின் இந்தப் புதினத்திலும் கிரகணங்களும், வால் நட்சத்திரங்களும், ஜிப்ஸி போன்ற அந்நியர்களும் குறியீடுகளாக வந்து போகிறார்கள்.

இப்புதினத்தில் தனித்துவம், அதன் மொழியாடல்! கதை ஒரே நேராகவோ, இல்லை சற்று பிளாஷ்பேக்குகளுடனோ, சீராகவோ இல்லாமல் எங்கெங்கோ பயணிக்கும்! மொத்தப் புதினமும் ஆறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. பத்திகளே கிடையாது! அதாவது, ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பத்தி! உரையாடல்களைப் பிரித்துக் காட்ட ‘ ‘ ” ” கிடையாது!! முற்றுப்புள்ளிகளில் முடிவதுதான் வாக்கியம் எனக் கொண்டால், பெரும்பாலான வாக்கியங்கள் பக்கங்களாக நீளும்!!! தோராயமாக ஒரு பக்கத்திற்கு 39 வரிகளைக் கொண்ட இப்புதினத்தின், கடைசி அத்தியாயம் முழுவதும் ஒரே பத்தியில் ஒரே வாக்கியத்தில் 45 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது!!!! பெரும்பாலான கதை, சர்வாதிகாரியின் மனவோட்டத்துடன் சொல்லப்பட்டிருந்தாலும், உரையாடல்களாவும் பத்திகளாகவும் பிரிக்கப்படாத வாக்கியங்களில், கதைசொல்லியும் மாற்றிக்கொண்டே இருப்பார்!!!!! உதாரணமாக‌
he secretly ordered his escort to arrest one of the musicians, that one, the one playing the tuba, and, indeed they found a sawed-off shotgun on him and under torture he confessed that he had planned to shoot him during the confusion as the people left, it was quite obvious, of course, the General explained, because I was looking at everybody and everybody was looking back at me, but the only one who didn’t dare look at me one single time was that son of a bitch with the tuba, poor devil, and still he knew that that wasn’t the ultimate reason for his anxiety, because he kept on feeling it at night in Government House even after his security service had shown that there was no reason for worry, General sir, everything was in order, but he clung to
மொழிப்பெயர்ப்பு புத்தகமே இந்த அளவிற்கு நீளுகிறதே, மூலமான ஸ்பானிஷில் எப்படி ஆசிரியர் எழுதியிருப்பார் என வியக்கிறேன்!

ஆசிரியரின் புதினங்களைத் தங்கர் பச்சானின் திரைப்படங்களோடு ஒப்பிடலாம். எல்லா ஆண்களின் வாழ்க்கையிலும் ஓர் ‘அழகி’ இருப்பது போல், நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்க ‘நூறாண்டுகளின் தனிமை’ மிகமிக நெருக்கமாக இருக்கும். ‘சொல்ல மறந்த கதை’ ஏதோ ஓர் மருமகனின் கதை என்பதால், Love in the time of cholera அவ்வளவு நெருக்கமில்லை. ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ சிறந்த படைப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அது எல்லா ஆண்களின் கதையல்ல. கிட்டத்தட்ட இப்புதினமும் அப்படித்தான். நாட்டையே பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டுபோய் நிறுத்தியபின், எல்லாம் இழந்து தனிமையில் வாடுவதை நம் நாட்டில் அத்வானியும், இஸ்ரேல் நாட்டை ஆண்ட ஒருவரும் நினைவுபடுத்தினாலும், இப்புதினத்தில் சர்வாதிகாரி கரீபியன் கடலையே விலைக்கு விற்றுவிடுவதைப் போல‌ உருளைக்கிழங்கைப் பெப்சிக்கு விற்றுவிட்ட நம் தலைவர்களை நினைவுபடுத்தினாலும், விசித்திரமாகக் காணாமல் போகும் பள்ளிக் குழந்தைகளைப் பற்றி துப்பறிய வரும் வெளிநாட்டுக் குழுக்கள் காவிரி மேலாண்மை வாரியத்தையும் மனித உரிமைகள் ஆணையத்தையும் புயல் சேதம் மதிப்பிடும் மத்தியக் குழுக்களையும் நினைவுபடுத்தினாலும் ஆசிரியர் சொல்ல வருவதை அப்படியே நமது சூழலுடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை. உதாரணமாக, மிகப்பெரிய கலவரங்களை உண்டாக்கி அல்லது கஷ்மீரில் ஏதாவது செய்து திடீரென ஆட்சியைப் பிடிக்கும் நம்மூர் வழக்கம் போல் அல்லாமல், மிக எளிதாக ஆட்சியாளனையே கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் யுத்திகள் நமக்கு அந்நியமானவை. என்னதான் நானும் முழுமையாக இப்புதினத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்ததே மிகப்பெரிய சாதனை. நான் படித்த தலைசிறந்த புதினங்களில் இதற்கும் கண்டிப்பாக இடமுண்டு.

‘இரண்டு அடி
கொடுத்தால் தான் திருந்துவாய்
வாங்கிக் கொள் வள்ளுவனிடம்’
என்றொரு கவிதை எழுதினார் அறிவுமதி. இப்புத்தகம் எடுத்து ஒரு வாக்கியம் படித்துப் பார்க்கச் சொல்வேன், இப்படி எல்லாம் புதினம் எழுதலாம் என்றறிய!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)