238. SHERLOCK HOLMES

அந்த வருடம் நான் பார்த்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும், ஒரு தெலுங்குத் திரைப்படத்திலும் Inspired by என்று தொடங்கினார்கள். இப்படியாக இதுவரை உலகிலேயே அதிகப்படியாக திரைமயமாக்கப்பட்ட கதாப்பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ். அவ்விரு திரைப்படங்களும் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தில் துப்பறியும் கதைகள். 100 வருடங்களுக்கு முந்தைய ஒரு புனைவுக் கதாப்பாத்திரம் எப்படி நவீன திரைப்படக்காரர்களைப் பாதிக்கிறது என ஆவல் உண்டாயிற்று. அதன்பிறகு ஓராண்டு வாழ்க்கை நகராமல் வழிந்தோட, ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் வாங்கிப் படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: The complete novels of SHERLOCK HOLMES
ஆசிரியர்: Sir Arthur Conan Doyle
வெளியீடு: Fingerprint Classics
முதல் ஈடு: 2021
பக்கங்கள்: 632
விலை: நினைவில்லை; மலிவுதான்
வாங்கிய இடம்: Flipkart
—————————————————————————————————————————————————————————————————————————
நான் வாங்கிய புத்தகம், நான்கு புதினங்களின் தொகுப்பு. எல்லாவற்றிலும் கொலைகள். பெண்ணுக்காக மண்ணுக்காக பொன்னுக்காக பெண்ணுக்காக. வட அமெரிக்காவில், பிரிட்டிஷ் இந்தியாவில், இங்கிலாந்தில், தென் அமெரிக்காவில் என வெவ்வேறு இடங்களுக்கு கதைவேர்கள் நீள்கின்றன. அக்காலத்துக் கதையில் திருச்சினாப்பள்ளி சுருட்டு வருகிறது! தமிழன்டா! நான்கு புதினங்களும் வெவ்வேறு கதைக்களங்களாக விறுவிறுப்பான பல பகுதிகள் இருந்தாலும், புனிதர்களின் பூமி என்ற விளக்கப்படும் பகுதி எனது விருப்பம்.

கைப்பேசித் திரையில் எல்லாவற்றையும் திரைப்படமாக பார்க்க முடிந்த இக்காலத்தில், புத்தகமாகப் படிக்கத் தேவையில்லை என்று நீங்கள் கருதினால் நன்று. நீங்கள் கடற்கரையிலே மணலாடுங்கள். நடுக்கடல் விரும்பிகள், கண்டிப்பாக படிக்கலாம். கிளாசிக் கிளாசிக் தான்!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)