239. அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்

உள்ளூரில் இப்படியொரு கிறுக்கன் இருக்கிறான் என எப்படியோ அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டார் அப்புதிய நண்பர். என் வீட்டிற்கு வந்துபோன என் நெருங்கிய நண்பர்களுக்கு எல்லாம் இல்லாத ஓர் ஆவல் அப்புதிய நண்பருக்கு. என் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும் என்றார்! முழுவதும் அலசியபிறகு, Sam Kean, Gabriel Garcia Marquez, ஆ.சிவசுப்பிரமணியன் போன்றவர்களைக் குறித்துக் கொண்டார். நான் ஏன் ஜெயமோகனை அதிகம் படிப்பதில்லை எனக் கேட்டார். அது திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதல்ல என்றாலும், இரு காரணங்கள் சொன்னேன். 1. விருது வாங்குபவர்களைப் படிப்பது இலமே; விருது கொடுப்பவர்களைப் படிப்பது அதனினும் இலமே 2. ஊமைச்செந்நாயும், ஏழாம் உலகமும் இன்னும் என்னால் சீரணிக்கப்படவில்லை. என்றேன். ஒருவேளை நான் காரணங்களை வரிசை மாற்றிச் சொல்லியிருந்தால் அவர் கடந்து போயிருக்கக்கூடும். விவாதத்தில் ஜெயமோகனின் தவிர்க்க முடியாத சில படைப்புகள் உண்டென்றார். அவர் எனக்கு பரிந்துரைத்த இரண்டு புத்தகங்களையும் வாங்கி, ஒன்றைத் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அட இன்னொன்றுதான் இது.
—————————————————————————————————————————————————————————————————————————
புத்தகம்: அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்
ஆசிரியர்: ஜெயமோகன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
முதல் ஈடு: அக்டோபர் 2011
பக்கங்கள்: 400
விலை: 400 ரூபாய்
வாங்கிய இடம்: 2022 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி நண்பன் சேரலாதன் அனுப்பி வைத்தாக நினைவு
—————————————————————————————————————————————————————————————————————————
பல புத்தகக் கடைகளில் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். கடந்துபோய்விடுவேன். எழுத்தாளர்களைப் பற்றிய உண்மைக் கதைகள் என நான் நினைத்தது எப்படியென்று தெரியவில்லை. ஒருவேளை, நான் முதன்முதலில் புரட்டிப் பார்த்தபோது ஏழாவது அல்லது கடைசி கதை தென்பட்டிருக்கலாம். எப்படியோ தமிழில் தவிர்க்கக் கூடாத ஒரு புத்தகம், புதையல் போல் தாமதமாகக் கிடைத்தாலும் மகிழ்ச்சி. மொத்தம் 12 கதைகள். எல்லாம் உண்மை மனிதர்களின் கதைகள். ஒருவரை எனக்குத் தெரியும்; இன்னொருவரைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். மற்ற பத்து பேரும் எனக்கு முற்றிலும் புதியவர்கள். அவர்களில் சிலரைப் பற்றி பின்னிணைப்பாக ஆசிரியரே அறிமுகம் செய்கிறார். சில கதைகளின் உண்மை மனிதர்கள் யாரென்று ஆசிரியர் சொல்லவில்லை; சொல்லவும் கூடாது.

இப்புத்தகத்தின் முதல் கதையான ‘அறம்’ கதையை, கவிஞர் வாலி சொன்னதாக ஏற்கனவே நண்பன் சேரலாதன் ‘உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கேளு’ என்று ஒருமுறை சொல்லியிருக்கிறான். இரண்டு கதைகள் புரியவேயில்லை. நூறு நாற்காலிகள், வணங்கான், யானை டாக்டர், கோட்டி என்ற கதைகள் தான் அதே வரிசையில் எனது விருப்பங்கள். புத்தகம் படித்து முடித்தபின், அப்புதிய நண்பரிடம் சொன்னேன்:

  1. நூறு நாற்காலிகள் போன்றொரு கதையை, அது சொல்லவரும் கருத்தை, இப்படியொரு வீரியத்துடன் வேறு யாரேனும் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை
  2. சமீபத்தில் மனம் சோம்பியிருந்த ஒரு பொழுதில், மீண்டும் வணங்கான் படித்தேன். அப்படியொரு புத்துணர்வு. அக்கதையை அதே வீரியத்துடன் சொல்ல, மனதில் அடிக்கடி ஓட்டிப் பார்க்கிறேன். அதே பெயரில் ஒரு திரைப்படம் வருகிறது, கண்டிப்பாக பார்ப்பதில்லை.
  3. பவா செல்லத்துரை கதைசொல்லி, யானை டாக்டர் இன்று பிரபலம். யானையையும் காந்தியையும் இரசிக்க வைப்பதில் ஜெயமோகன் தனித்து நிற்கிறார்.

நன்றிகள் புதிய நண்பா!

– ஞானசேகர்
(http://jssekar.blogspot.com/)